வாதுமைக் கொட்டை (Walnut)

 

வாதுமைக் கொட்டை (Walnut) என்பது யக்லான்சு பேரினத்தில் அடங்கியுள்ள யக்லாண்டசியே குடும்பத்தைச் சேர்ந்த யக்லான்சு ரெஜியா மரத்தின் கொட்டையாகும். இந்தக் கொட்டையானது மேலோட்டுடன் கூடியதாகும். பச்சையான கொட்டைகள் ஊறுகாய் தயாரிக்கவும் நன்கு விளைந்த கொட்டைகள் உணவாகவும் பயன்படுகின்றன.

யக்லான்சு நைக்கிரா மரத்திலிருந்து பெறப்படுகின்ற கிழக்கத்திய கருப்பு வாதுமைக் கொட்டையானது வர்த்தகரீதியாக மிகவும் குறைவாகவே கிடைக்கிறது. இக்கொட்டையில் புரதச்சத்தும் கொழுப்பு அமிலமும் நிறைந்துள்ளன.

வாதுமைக் கொட்டையானது, நன்கு பழுத்த பின்பு உண்ணத் தகுந்த, ஒற்றை விதையினைக் கொண்ட வட்ட வடிவக் கொட்டையாகும்.

முற்றிலும் பழுத்தபின்பு வாதுமைப் பழத்தின் சுருக்கம் நிறைந்த மேல்புறத்தோல் கழன்று, இருபிரிவுடைய மேலோட்டுடன் வாதுமைக் கொட்டையானது வெளிப்படும். (முப்பிரிவுடைய மேலோடுகளும் தோன்றுவதுண்டு).

பழுக்கும் தருணங்களில் மேல் தோலானது உடைகின்ற தன்மையையும் கொட்டையின் மேலோடானது கடினத்தன்மையையும் பெறுகின்றன.

சதைப் பகுதியினை மூடியுள்ள ஓடு இரண்டு பிரிவுகளைக் கொண்டுள்ளது.

சாதாரணமாகக் கிடைக்கக்கூடிய ஒட்டுடன் கூடிய வாதுமைக் கொட்டையின் மீதுள்ள பழுப்புநிற தோல் ஆன்டியாக்சிடண்டுகளைக் கொண்டதாகும்.

இந்த ஆன்டியாக்சிடண்டுகள் எண்ணெய் மிகுந்த கொட்டையினை, சுற்றுப் புறத்திலுள்ள ஆக்ஸிஜனிடமிருந்து பாதுகாத்து கெட்டுப் போவதைத் தடுக்கிறது.

பொதுவாக வாதுமை மரங்கள் வசந்தகாலத்தின் பாதியைக் கடந்து மிகவும் தாமதமாகவே தளிர்க்கின்றன.

இம்மரங்களின் அருகே போட்டியிட்டு வளரும் பிற தாவர வளர்ச்சியைத் தடுக்கும்பொருட்டு இவை ஒருவகை வேதிப் பொருளை மண்ணுக்குள் சுரக்கின்றன.

இதனால்தான் மலர்த்தோட்டங்களையும் காய்கறித்தோட்டங்களையும் இம்மரங்களை ஒட்டி அமைப்பதில்லை.

வாதுமைக் கொட்டைகள் ஓடுடன் கூடியது மற்றும் ஓடில்லாத பருப்பு என இருவகைகளில் கிடைக்கின்றன.

இக்கொட்டைகள் சுவையூட்டப்பட்ட சிறு துண்டுகளாகவும் பிற உணவுப் பொருள்களுக்கான மூலப் பொருளாகவும் பயன்படுகின்றன.

அனைத்து வகைக் கொட்டைகளும் அப்படியே சாப்பிடுவதற்கு ஏற்றவையாகும்.

மியூசிலி போன்ற உண்வுப் பொருளின் பகுதிப் பொருளாகச் சேர்த்தும் உண்ணப்படுகின்றன.

வாதுமை பானம், வாதுமை காபி, வாதுமை கேக்கு, வாதுமை ஊறுகாய் போன்ற பொருள்களைத் தயாரிக்கவும் இக்கொட்டைகள் பயன்படுகின்றன.

பழுக்காத பச்சை வாதுமையை ஆல்கஹாலில் ஊற வைத்து நோசினோ என்னும் மதுபான வகை தயாரிக்கப்படுகிறது.

வாதுமைக்கொட்டை எண்ணெய் வணிகப்பயன்பாட்டுக்கு கிடைக்கின்றது, முக்கியமாக சாலட் தயாரிப்பில் அலங்காரப் பொருளாக பயன்படுகிறது.

இது குறைந்த புகைப்புள்ளியைக் கொண்டுள்ளதால் வறுத்தலுக்குப் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேயே பயன்படுத்தப்படுகிறது.

ஆரோக்கியத் தன்மை :

Free photos of Squirrel

“குறைந்த கொழுப்புடைய உணவின் ஒரு பகுதியாக, தினமும் 1.5 அவுன்சுகள் வாதுமைப் பருப்பினை உண்பதால் இதய நோய் வருவதற்கான வாய்ப்புகள் குறைவதாக உறுதிப்படுத்தப்படாத ஆய்வு கூறுகிறது”.

2004 ஆம் ஆண்டு அமெரிக்க ஐக்கிய நாட்டின் உணவு மற்றும் மருந்து நிர்வாக அமைப்பு ” வாதுமை கலந்த உணவால் இதய நோய் வாய்ப்புகளைக் குறைக்க முடியும்” என்ற கருத்தினை மறுத்தது.

அது 2010இல் டைமண்டு உணவு நிறுவனத்திற்கு எழுதிய எச்சரிக்கைக் கடிதத்தில் ” இதய நோய்க்கான வாய்ப்பினைக் குறைக்கின்ற எந்தவொரு உயிரியல்ரீதியான உட்பொருளும் வாதுமைக் கொட்டையில் இருப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லை” எனத் தெரிவித்திருந்தது.