மனதில் பல துன்பங்கள்
இருந்தாலும் இனிய
சாரலோடு மழையில்
நனையும் போது
துன்பங்கள் கூட
சந்தோசமாக
மாறி விடுகிறது..
பொழியும் மழைத்
துளிகளுக்கு தெரிவதில்லை
பல உயிர்களின் தாகத்தை
தீர்க்கத் தான் சென்று கொண்டு
இருக்கிறோம் என்று..
தங்கள் வீடுகளை இழந்து
அகதிகளாக அலையும்..
பறவைகளுக்கு தான்
புரியும் மரங்களின் அருமை.
தினமும் இரவு வந்தால்
கருப்பு நிற உடையை
அணிந்து கொள்கிறது பகல்.
சில நொடிப் பொழுது
வாழ்ந்தாலும் தானும்
குதூகலமாகவும் தன்னை
ரசிப்பவர்களையும்
பரவசமாக்கும் பனித்துளி.
மரத்தடியில் உதிர்ந்து
கிடக்கும் மலர்கள்..!
தன்னை வளர்த்து விட்ட
வேர்களை மரம் பூப்போட்டு
வணங்குகிறதா..?
கடல் அலைகளுக்கு
எவ்வளவு அன்பு கரைகள்
மீது ஒவ்வொரு முறையும்
முத்தமிட்டு தன் அன்பை
வெளிப்படுத்துகின்றன.
இந்த உலகில் யாரும்
அனாதை அல்ல
இனிமையை தர காற்றும்
வழிகாட்ட வானமும்
இருக்கும் வரை.
இயற்கை செழிக்க
வைத்தால் இயற்கை
நம்மை செழிக்க வைக்கும்.
இயற்கையை நாம் அழிக்க
நினைத்தால் இயற்கை
நம்மை அழித்து விடும்.
ஆறாத காயங்களுக்கு
நீண்ட தூர பயணமும்
இயற்கையும் தான்
சிறந்த மருந்தாக
இருக்கின்றது.
இயற்கையின் ரகசியம்
தினமும் வெளி உலகிற்கு
தெரியாமல் மூடி
மறைகின்றது இரவு.
யாரை தேடி அலைகின்றது
என்று தெரியவில்லை
இந்த நிலா இரவு முழுவதும்
அலைந்து கொண்டே
இருக்கின்றது இந்த நிலா..!
இயற்கையின் மடியில்
அவ்வப்போது வந்து
இளைப்பாறுகிறது
இடியும் மின்னலும்..!
இரு மேகங்கள் ஒன்றோடு
ஒன்று இணையும் பொழுது
மின்னல் மோதிரம்
மாற்றிக் கொள்கிறது.
மேகம் குளிக்கும் போது
இந்த பூமி சுத்தமாகின்றது
இப்படிக்கு மழை.
நீல வான மாளிகையில்
வெள்ளை நிற
தேவதை நிலா.
தனக்கென பாராமல்
பிறரை மகிழ்விப்பது
இயற்கை தான்
செயற்கைக்காக அதனை
அழிப்பது மனிதன்
செய்யும் பாவம்.
பூமி குளிர்ந்து பயிர்கள்
வளர்ந்து மனித இனம்
வாழ உயிர் பிச்சை
போடுகிறது வானம்
இப்படிக்கு மழை.
கோபங்கள் சீற்றங்கள்
மனிதனுக்கு மட்டும் அல்ல
இயற்கைக்கும் உண்டு.
நாம் இயற்கையை அடக்க
நினைத்தால் அது நம்மை
அழித்துவிடும்.
இயற்கையின் அருமை
புரியால் மனிதனே
மனிதனுக்கு எமனாக
மாறுகிறான் இயற்கையை
காப்போம்..
செயற்கையை குறைப்போம்.
நீ செய்யும் செயலை
மற்றவர்கள் ரசிக்கவில்லை
என்பதற்காக நிறுத்தி விடாதே
சுட்டெரிக்கும் சூரியனை
எவரும் ரசிக்கவில்லை
என்பதற்காக
சூரியன் உதிக்காமலா
போய் விடுகிறது.
வானத்தில் இருந்து வரும்
மழைத்துளி மண்ணை
நனைக்க முன் பல
விவசாயிகளின் மனதை
நனைத்து விடுகின்றது.
ஏழையின் சிரிப்பில்
இறைவன் இருக்கிறான்
என்பார்கள் ஆனால்
தரிசிக்க தான் இவ்வுலகில்
யாரும் இல்லை..!
மலையின் உச்சியில்
இருந்து விழுந்தாலும் எனக்கு
மரணமில்லை
இப்படிக்கு நீர்வீழ்ச்சி.