இந்தியாவின் தேசப்பிதா என வர்ணிக்கப்படும் மகாத்மா காந்தி உலகின் தலைசிறந்த தலைவராவர். பிரித்தானியரிடம் அடிமைப்பட்டுக் கிடந்த இந்திய தேசத்தை சுதந்திரம் அடையச் செய்ததில் இவரின் பங்கு அளப்பரியது.
காந்தியடிகளின் முழு பெயர் மோகனதாஸ் கரம்சந்த் காந்தி ஆகும். இவர் 1869 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 2ஆம் திகதி இந்தியாவில் உள்ள குஜராத் மாநிலத்தில் போர்பந்தர் என்னும் இடத்தில் பிறந்தார்.
இவரது தாய்மொழி குஜராத்திய மொழியாகும். கஸ்தூரிபாய் என்பவரை தனது 13வது வயதில் திருமணம் செய்து கொண்டார். இவர் தனது 16வது வயதில் தந்தையை இழந்தார். இவருக்கு நான்கு ஆண் குழந்தைகள் பிறந்தது.
சிறு வயதில் இவர் பார்த்த அரிச்சந்திரா நாடகம் இவரின் மனதில் பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தியது.
படிப்பில் மிகவும் புத்திசாலியாக இல்லாவிடினும் நேர்மையான மாணவனாக விளங்கினார். இவர் இங்கிலாந்து சென்று பாரிஸ்டர் என்னும் வழக்கறிஞர் கல்வியை முடித்தார். படிப்பினை முடித்த பின்னர் இந்தியா திரும்பிய காந்தியடிகள் மும்பையில் வழக்கறிஞராகப் பணியாற்றினார்.
1893ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் பணிபுரிய பயணம் மேற்கொண்டார். அக்காலம் தென்னாப்பிரிக்காவில் நிறவெறி, இனப்பாகுபாடு மேலோங்கி காணப்பட்டது. இது காந்தியை வெகுவாகப் பாதித்தது.
இந்திய விடுதலைப் போராட்டத்தை தலைமையேற்று நடத்திய மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரராவார். ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராகவும் இந்திய விடுதலைக்காகவும் பாடுபட்டவராவார்.
அந்நியப் பொருட்கள் புறக்கணிப்பு, உப்பு சத்தியாக்கிரகப் போராட்டம், ஒத்துழையாமை இயக்கம், வரிகொடா இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் எனப் பல போராட்டங்களை அறவழியில் முன்னெடுத்து நடாத்தினார்.
இதனால் இவர் விடுதலை பெற்ற “இந்தியாவின் தந்தை” என இந்திய மக்களால் போற்றப்படுகிறார். அகிம்சை என்னும் வன்முறையற்ற மாபெரும் மந்திரத்தை உலகத்திற்கு வித்திட்ட உன்னத மனிதர் மகாத்மா காந்தி ஆவர்.
ஆங்கிலேயரை எதிர்த்து இந்திய விடுதலைக்கு காரணமானார். தன்னுடைய வாழ்நாள் முழுவதும் பாரத நாட்டிற்காக அர்பணித்த உன்னத மாமனிதர்.
காந்தியடிகள் பகவத் கீதை, சமய கொள்கைகள், லியோ டால்ஸ் டாயின் எழுத்துக்கள் போன்றவற்றால் ஈர்க்கப்பட்டவார். சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளை தன் வாழ்நாள் முழுவதும் கடைப்பிடித்தார்.
வைணவ குடும்பத்தில் பிறந்ததால் சைவ உணவுகளை உண்டார். குறிப்பாக பழங்கள், கடலை, ஆட்டுப்பால் போன்றவற்றையே உண்டு வாழ்ந்தார்.
மேலைநாட்டு உடைகளைத் தவிர்த்து இந்திய நாட்டில் தயாரிக்கப்படும் காதி உடைகளையே அணிந்தார். இந்திய விடுதலைக்காகப் போராடிய அகிம்சை வீரனாவர்.
காந்தியடிகளின் உயிரானது துப்பாக்கி குண்டால் பறிபோனது. 1948ஆம் ஆண்டு ஜனவரி 30ஆம் திகதி தில்லையில் “நாதுராம் கோட்சே” என்பவரால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
இவரது தியாகத்தை கௌரவிக்கும் வகையில் காந்தியடிகளின் பிறந்த தினமான அக்டோபர் 2ஆம் திகதி காந்தி ஜெயந்தி என்ற பெயரில் அரசு விழாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அகிம்சை என்றால் காந்தி என்றும், காந்தி என்றால் அகிம்சை என்றும் இந்திய மக்கள் மட்டுமன்றி உலக மக்கள் மத்தியிலும் எண்ணப்படும் விடுதலைப் போராட்ட வீரரானான காந்தியடிகள் முன்னுதாரணமான தலைவராவார்.
இந்திய கல்வித்திட்டத்தில் காந்தியின் வரலாறானது ஒரு பாடமாக கற்பிக்கப்படுகிறது. தன் வாழ்வில் சத்தியம், அகிம்சை ஆகிய கொள்கைகளைக் கடைபிடித்து அதன்படி வாழ்ந்த மகான் ஆவர். நாமும் நாம் வாழ்நாளில் அகிம்சை, சத்தியம் போன்றவற்றை கடைப்பிடித்து வாழ்வோமாக.