வணக்கம் இன்றய பதிவில் கிபி. இரண்டாம் நூற்றாண்டுல சிறப்பான ஆட்சியக் கொடுத்து, காலம் கடந்து இன்னைக்கும் இந்த உலகத்தையே திரும்பி பார்க்க வைக்கக் கூடிய கல்லணையை கட்டுன கரிகாலச் சோழனைப் பத்தி தான் இன்னைக்கு நாம பார்க்கப் போறோம்.
கரிக்கலானின் வாழ்க்கை வாரலாறு
கரிகாலச் சோழனோட தந்தை இளஞ்சேட்சென்னி, ஒரு மிகச்சிறந்த மன்னர். அவன் ஒரு வேளிர் குலத்து இளவரசியை திருமணம் செய்துகிட்டான். கரிகால சோழன் தாயின் வயித்துல இருக்கும் போதே இளஞ்சேட்சென்னி ஒரு போரில் வீரமரணம் அடைஞ்சுட்டான். இத சாதகமா பயன்படுத்திக்கிட்டு, சோழ நாட்டு அதிகாரிகள் சிலர் எதிரி நாட்டு மன்னர்களோட சேர்ந்து ஆட்சியக் கைப்பத்திட்டாங்க.
இதுக்கு மேலயும் அரண்மனையில இருந்தா குழந்தைக்கும், தனக்கும் ஆபத்துனு தெரிஞ்சுக்கிட்ட மகாராணி கோட்டையை விட்டு தப்பிச்சு போய் காட்டுக்குள்ள மறைச்சு வாழ்ந்தாங்க. சில மாதங்கள்ல கரிகாலச் சோழன் மண்ணில் உதித்தான். ஒரு வீரமான சோழப் புலி பிறந்து வளர்ந்து வந்தது. அந்தப் புலி தான் நமக்கெல்லாம் எமனாக வரப் போகிறது என்று ஆட்சிய கைப்பத்துன சதிகாரர்கள் யாரும் நினைச்சுப் பாக்கவே இல்ல.
காலம் ரொம்ப வேகமா ஓடிட்டு இருந்துச்சு. கரிகாலன் சோழ நாட்டிற்குள் நுழையிற தருணமும் வந்தது. சோழ நாட்டுல மன்னர் குடும்பத்துக்கு விசுவாசமான அதிகாரிகள் எல்லாம் சேர்ந்து, கரிகாலனையும், அவனது தாயையும் தேடுறதுக்கு ஆரம்பிச்சாங்க. ஒரு வழியாக தேடி தாயையும் மகனையும் கருவூருல, அதாவது இன்றைய கரூரில் இருப்பதை கண்டுபிடிச்சாங்க. அதுக்கு அப்புறம் கரிகால சோழன் சோழ தேசத்திற்குள்ள அடியெடுத்து வைச்சான்.
அந்த நேரத்துல இவன் தான் இளஞ்சேட்சென்னியின் மகன் என்பது சதிகாரர்களுக்கு தெரியவந்தது. அரியணைக்கு உரியவன் நாட்டுக்குள் வந்துவிட்டால் சதிகாரர்களுக்கு பொறுக்குமா? கோபம் கொண்டனர். இதற்கு மேல் அவன் இருப்பது நமக்கு தான் ஆபத்து என்பதை அறிந்து கொண்டு கரிகாலனைக் கைது செய்து சிறை படுத்திவிட்டனர். அப்போது அந்த சோழப் புலிக்கு வயது 5.
கரிகாலன் பெயர் வரகாரணம்
கரிகாலனும் அவனது தாயும் மறைஞ்சு வாழ்ந்த காலத்துல அவனுக்கு உதவி செஞ்சது கரிகாலனோட மாமன் இரும்பிதர் தலையன் தான். கரிகாலன் சிறுபிள்ளையாக இருந்தாலும் அவன் தான் நமக்கு எமன் என்று எதிரிகள் புரிஞ்சுக்கிட்டாங்க. இதற்கு மேலும் இவனை விட்டு வைக்கக் கூடாது என்று முடிவு செய்த எதிரிகள் கரிகாலனை சிறையிலேயே தீர்த்து கட்டி விட எண்ணி, சிறை முழுவதுக்கும் தீ வைத்தனர். அந்த நேரத்தில் கரிகாலனின் மாமன் இரும்பிதர் தலையன் சிறைக்குள் புகுந்து கரிகாலனை காப்பாற்றினான். அப்ப தான் கரிகாலனோட காலுல தீக்காயம் பட்டுருச்சு. இந்த காரணத்துனால தான் இவனுக்கு கரிகாலச் சோழன் என்ற பெயரும் கிடைச்சது.
“அரிகால்மேல் தேன் தொடுக்கும்
ஆய் புனல் நீர் நாடன்
கரிகாலன் கால் நெருப்புற்று”
என்று இந்த செய்தியை பொருநராற்றுப்படை நமக்கு விளக்குகிறது.
கரிக்காலனின் வீரம்
அங்கிருந்து தப்பித்த கரிகாலச் சோழன் போர்க் கலைகளை எல்லாம் முறையாகவும் தெளிவாகவும் கற்றுக் கொண்டு, மிகப்பெரும் வீரனானான். வாள் எடுத்து, வேல் எடுத்து, படை திரட்டினான். சீறும் புலியாக பாய்ந்து சென்றான். வெண்ணி என்னும் இடத்தில் எதிரிகள் மீது பெரும் போர் தொடுத்தான். தன்னோட உரிமையைத் தட்டிப் பறிக்க எண்ணியவர்களோட தலைகளை எல்லாம் சரிக்க வெறி கொண்டிருத்தான், கரிகாலன்.
பொடிப்பய நம்மள என்ன பண்ணிடுவானு எலக்காரமா நினைச்ச எதிரிகளுக்கு வெண்ணிப் போருல நல்ல பாடம் சொல்லிக் கொடுத்தான், கரிகாலச் சோழன். ஒருபுறம் கரிகாலச் சோழன். மற்றொரு புறம் சேர மன்னன், பாண்டிய மன்னன், இவர்களுக்கு துணையாக இன்னும் 11 குறுநில மன்னர்கள். இத்தனை எதிரிகளையும் கரிகாலச் சோழன் ஒற்றைத் தலைவனாக, ஒற்றை வீரனாக நின்று எதிர்த்தான். அவனது வீரம் எல்லோரையும் திகைத்துப் போகச் செய்தது.
முரசு கொட்டியது. போர் தொடங்கியது. யானைகள் எல்லாம் பிளிறிக் கொண்டு மோதின. குதிரைப் படைகள் சீறிப் பாய்ந்தன. காலாட்படைகள் வாள் வீசின. வாள்களும் வாள்களும், வேல்களும் வேல்களும், கேடயங்களும் கேடயங்களும் மோதிக் கொண்டன. கரிகாலன் வாளை எடுத்தான். அவன் வாளைச் சுழற்சிய திசைகளில் எல்லாம் மனிதத் தலைகள் தரையில் உருளத் தொடங்கின.
கரிகாலனோட வீரம், எதிரிகளுக்கும் அவங்க வீரர்களுக்கும் மரண பயத்த கொடுத்துச்சு. அவனோட வீரம் சோழ வீரர்களுக்கு உற்சாகத்த கொடுத்துச்சு. அவன் படைகள் முன்னேறிச் சென்றன. கரிகாலனும் வெற்றியை நோக்கி சென்றான். பாண்டியப் படையும், சேரப் படையும் பின்வாங்கியது. பாண்டிய சேர மன்னர்களும், குறுநில மன்னர்களும் பீதி அடைந்தனர்.
பின்வாங்கிய படை சிறிது நேரத்தில் சிதறி ஓட ஆரம்பித்தது. கரிகாலனின் வீரத்திற்கு ஈடு கொடுக்க முடியாதுனு அவங்களுக்கு தெரிஞ்சிடுச்சு. கரிகாலனின் வெற்றி வெறி இன்னும் அதிகமாச்சு. கண்ணுல படுற எதிரிகள எல்லாம் துவம்சம் செய்தான். வெட்டி வீழ்த்தினான். எரிமலையாக பொங்கி எதிரிகளைச் நெருப்பாய் சுட்டெரித்தான்.
அப்போது ஒருவன், ஒரே ஒருவன் மட்டும் கரிகாலனை எதிர்த்து நேருக்கு நேர் நின்று போர் செய்தான். கரிகாலனின் வீரத்திற்கு அவன் சற்றும் குறைந்தவன் அல்ல. இருவரில் எவர் வெல்வார் என்பதை நிச்சயமாக யூகிக்கவே முடியாது. அந்த வீரன் தான் சேரமான் பெருஞ்சேரலாதன். ரொம்ப நேரம் ரெண்டு பேருக்கும் கடுமையா சண்டை நடந்துச்சு.
ஒரு கட்டத்துல பொறுமை இழந்த கரிகாலச் சோழன் தன் ஈட்டியை பெருஞ்சேரலாதன் மார்பில் இறக்கினான். முன் மார்பு துளைத்த ஈட்டி பின் முதுகில் எட்டிப் பார்த்தது. பெருஞ்சேரலாதன் புறமுதுகிட்டு ஓடவில்லை. வீரத்தோடு தான் போரிட்டான். ஆனாலும், அவன் முதுகில் காயம் பட்டது. இது அவன் வீரத்திற்கு இழுக்கு. அவன் குலத்திற்கு அவமானம். இதனால், பெருஞ்சேரலாதன் அதே போர்க்களத்தில் வடக்கிருந்து உயிர் துறந்தான்.
பெருஞ்சேரலாதனின் நெஞ்சில் ஈட்டி இறக்கிய கரிகாலன் எவ்வளவு பெரிய வீரனோ முதுகில் விழுப்புண் பட்டதால் உயிரை விட்ட பெருஞ்சேரலாதனும் அவனுக்கு சற்றும் குறைவில்லாத வீரன். இந்த செய்தியை போர்க்களத்தில் இருந்து நேரில் பார்த்த, வெண்ணி குயத்தியார் தனது புறநானூற்றுப் பாடலில் குறிப்பிடுகின்றார்.
கரிகால சோழன் மன்னனாகி ஈடுபட்ட முதல் போர் வெண்ணிப் போர் தான். இதுதான் அவன் வரலாறை புரட்டிப் போடும் போராகவும் அமைந்தது. இந்த போரில் சேர பாண்டிய மன்னர்களை வென்று மூவேந்தர்களின் தலைவனாக திகழ்ந்தான், கரிகாலச் சோழன். கரிகாலன் தனது அரியணையை நிலைநாட்ட கிடைச்ச மிகப்பெரிய வெற்றி, வெண்ணிப் போர் வெற்றி தான்.
அதன் பிறகும் கரிகாலனின் வாளுக்கு வேலை இல்லாமல் போகவில்லை. சில காலங்களில் வாகைப் பெருந்தலை போர் நடந்தது. இதில் கரிகாலனை 9 குறுநில மன்னர்கள் தலைமையேற்று எதிர்த்து நின்றனர். வாகைப் பெருந்தலைப் போரிலும் பெரும் வெற்றி வாகை சூடினான் கரிகாலச் சோழன்.
இமயத்தில் புலிக்கொடியை நாட்டிய கரிகாலன்
கரிகால சோழனின் வீரத்தைக் கண்டு போர்க்களங்களில் வெற்றி அவன் முன் வந்து மண்டியிட்டு நிற்கும். வாகை பெருந்தலையில் வெற்றி கொண்ட பின்னர் வட நாட்டை நோக்கி திரும்பினான் கரிகாலன். வச்சிரம், மகநதம், அவந்தி ஆகிய நாடுகளின் மேல் படையெடுத்துச் சென்றான். அங்குள்ள மன்னர்கள் இவனுடன் போர் செய்து தோல்வியுற்றோ, சமரசம் செய்தோ அவர்கள் நாட்டை கரிகாலனுக்கு ஒப்படைத்தனர்.
வடநாடு முழுவதும் சென்று வெற்றியும் கண்டு இமய மலையிலும் புலிக்கொடிச் சின்னத்தைப் பதித்தான் கரிகாலச் சோழன். இவன் இமயத்தில் புலிக்கொடி நாட்டியது, பிற்காலத்தில் வந்த பல்வேறு சோழ மன்னர்களுக்கு இலக்காக இருந்தது. கரிகாலச் சோழனை போல் வடநாடுகளை வென்று இமயத்தில் புலிக்கொடியை நாட்ட வேண்டும் என்ற இலக்கை தன் உயிர் மூச்சாக கொண்டு செயல்பட்ட சோழ மன்னர்கள் எத்தனையோ பேர் இருந்தனர்.
இலங்கையை கைபற்றிய கரிகாலன்
அதன் பிறகு கடல் கடந்து இலங்கை நாட்டின் மீது போர் தொடுத்துச் சென்றான், கரிகாலச் சோழன். இலங்கை தேசத்தை முழுவதுமாக கைப்பற்றிய சில மன்னர்களில், கரிகால சோழனும் ஒருவன். அங்கும் தனது புலிக்கொடியை நாட்டினான். எட்டுத்திக்கும் கரிகாலச் சோழன் வாழ்க என்று முழங்கும் வண்ணம் பல்வேறு வெற்றி கண்டான் கரிகாலச் சோழன்.
இத்தனை வெற்றிகளை குவித்த பின்னர் குறுநில ஆட்சியாக இருந்த சோழர்களின் அரசு, மிகப் பெரிய பேரரசாக; காஞ்சி – காவிரி வரை விரிந்தது. கரிகால சோழனுக்கு ஒப்பாக யாருமே இல்லை. அவனுக்கு மிகுதியாகவும் யாரும் இல்லை. அவனுக்காக ஒரு வரலாறை அவனே உருவாக்கினான் கரிகாலச் சோழன். இன்றும் இந்த உலகம் அவன் வீர வரலாற்றைப் பேசிக் கொண்டிருக்கிறது. நாமும் அதையே பேசிக் கொண்டிருக்கிறோம். அவன் வீரத்திற்கு கிடைத்த அடையாளம் தான், இவ்வரலாறு.
கரிகாலன் கட்டிய கல்லணை
இலங்கையில் போர் தொடுத்து வென்ற பின்னர் 12,000 சிங்கள வீரர்களை கைதிகளாகப் பிடித்துவந்து கல்லணை கட்டும் பணியில் ஈடுபடுத்தினான் கரிகாலச் சோழன். பறந்து விரிந்து ஓடிக் கொண்டிருக்கும் காவிரி நதிக்கு மிகப்பெரிய கல்லணை எழுப்பினான். பல ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்றளவும் அந்த கல்லணை நமது பயன்பாட்டில் இருக்கிறது. நம் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்கிறது. உலகத்தார் நம் தமிழர்களை பார்த்த வியந்து நிற்கும் கட்டடக் கலைகளில் ஒன்றாக கல்லணையும் திகழ்கிறது. இத்தனை பெருமைக்கும் நம்மை எல்லாம் உரித்தாக்கியவன் மாமன்னன் கரிகாலச் சோழன்.
அந்த காலத்துப் பழையமையான முறையில் காவிரி கல்லணை கட்டப்பட்டது. வெட்டப்படாத வலிமையான கற்களை கொண்டு கல்லணை எழுப்பினார்கள். 1080 அடி நீளமும் 60 அடி அகலமும் கொண்ட கல்லணை இன்றளவும் நெஞ்சை நிமிர்த்தி நான் கரிகாலச் சோழன் காலத்தில் பிறந்தவன் என்று தீரமாகச் சொல்லுகிறது.
இது போக சோழ நாட்டின் பாசனத்திற்காக, விவசாயத்திற்காக பல்வேறு திட்டங்களை வகுத்தான் கரிகாலன். பல்வேறு தொலைநோக்கு பார்வையுடைய திட்டங்களை செயல்படுத்தி சோழ தேசத்தை செழிப்படையச் செய்தான். மக்களுக்கும் ஒரு சிறப்பான ஆட்சியைத் தந்தான். வீரத்திலும், தீரத்திலும் மிகச்சிறந்தவனாக திகழ்ந்தான் கரிகாலச் சோழன்.
திருமாவளவன், கரிகால் பெருவளத்தான், மா வளத்தான் என்று ஏராளமான பட்ட பெயர்களையும் பெற்றிருந்தான், கரிகாலச் சோழன். தெற்கு பகுதிகளை வென்று, வடக்குப் பகுதிகளையும் வென்று இமயத்தில் புலிக்கொடி பொறித்து, கடல் கடந்து இலங்கையை வென்ற வீராதி வீரன் கரிகாலச் சோழனின் வரலாறை தெரிந்து கொள்வதற்கே நாமெல்லாம் பெருமைப்பட வேண்டும். கரிகாலன் எங்கள் தமிழன், அவன் பிறந்த மண்ணில் தான் நாங்களும் பிறந்தோம் என்று இந்த உலகத்திற்கே நாமெல்லாம் பெருமையோடு மார்தட்டிச் சொல்ல வேண்டும்.
தொடரபுடயவை: ராஜ ராஜ சோழனின் வாழ்க்கை வாரலாறு