ரொம்ப காலத்துக்கு முன்னால ஒரு புகழ்பெற்ற துறவி ஒருத்தரு வாழ்ந்துட்டு வந்தாரு.அவரோட மடாலயத்துல அவருக்கு நெறய சிஷ்யர்கள்லாம் இருந்தாங்க.. அவரோட சிஷ்யர்களுக்கு மட்டும் இல்ல அந்த கிராமத்துல இருக்கற எல்லாருக்குமே அவர் ஒரு வழிகாட்டியா இருந்தார். அந்த ஊர் மக்கள் தங்காளுக்கு என்ன பிரச்சனைனாலும் அவர் கிட்ட தான் வருவாங்க..இப்படி இருக்கும் போது ஒரு நாளு அந்த துறவிக்கு வயோதிகம் காரணமா உடம்பு சரியில்லாம போகுது. மரணிக்கப்போற தருவாயில இருக்கிற துறவியோட கடைசி வார்த்தைகள கேக்குறதுக்கு கிராமமக்கள் எல்லாருமே அந்த மடாலயத்துக்கு முன்னால கூடி இருக்குறாங்க.
அவரோட சிஷ்யர்கள்லயே திறமையான ஒரு இளம் துறவியும் இருந்தார். அவர் தான் இனி அந்த மடாலயத்த நடத்தப் போறதா குருவான துறவி ஏற்கனவே அறிவிச்சிருந்தார். இப்ப மரணப்படுக்கைல இருக்குறவர் அங்க இருந்த அந்த இளம் துறவிய தன் பக்கத்துல கூப்டு தன் கடைசி அறிவுறைய சொன்னார்..”நல்ல ஞாபகம் வச்சுக்கோ….எந்தவொரு நிலையிலயும் நீ உன்னோட வாழ்க்கைல ஒரு பூனைய மட்டும் அனுமதிச்சிரவே அனுமதிச்சிராத” இத சொல்லிட்டு அந்த துறவி இறந்து போயிடுறாரு.ஆனா அந்த இளம் துறவி உட்பட இத கேட்ட எல்லாருக்குமே அதோட பொருள் என்னங்கிறது பிடிபடல. அந்த துறவியோட இறுதி சடங்குகளலாம் முடிச்சி,அவர நல்லபடியா அடக்கம் பண்ணிட்டு, எல்லாரும் அவங்கவங்க வேலைய பார்க்கப் போயிட்டாங்க. ஆனா இந்த இளம் துறவிக்கு மட்டும் அவங்க குருவோட அந்த இறுதி வார்த்தைகளோட பொருள் என்னன்னு புரியாம வேலையே ஓடல. “நா எதுக்காக என்னோட வாழ்க்கைலல ஒரு பூனைய அனுமதிக்கப் போறேன்…..? பூன வந்தா தான் என்ன” அப்படினு யோசிச்சு யோசிச்சு குழம்பிட்டு இருந்தார்.
அந்த மடாலயத்துலயே ஒரு வயதான துறவி ஒருத்தரும் இருந்தாரு.அவரு அந்த தலைமை துறவியோட நெடுநாள் நண்பர்,அவரோட ஆரம்பகால வாழ்க்கைய பத்தி நல்லா தெரிஞ்சவரும் கூட.இதனால அவர்கிட்ட போயி நம்மளோட இந்த சந்தேகத்த கேக்கலாமே அப்படினு முடிவு பண்ணி அவர்கிட்ட கேட்டாரு அந்த இளம் துறவி.
இத கேட்ட அந்த மூத்த துறவி…. ஓ அதுவா,அதுக்குப் பின்னாடி ஒரு பெரிய கதை இருக்கு,.அந்த வார்த்தைகளோட அர்த்தத்த புரிஞ்சிக்கிறதுக்கு நீ அந்த முழுக் கதையையும் தெரிஞ்சுக்கணும் அப்படினு அந்த கதையையும் சொல்ல ஆரம்பிச்சாரு அந்த மூத்த துறவி.
அவங்களோட குரு தன்னோட மனைவி, மக்களெல்லாம் விட்டுட்டு,ஒரு காட்டுல தன்னோட துறவு வாழ்க்கைய ஆரம்பிச்ச காலக்கட்டம் அது…. அப்போ பக்கத்துல இருக்கற கிராம மக்கள் தான் அவருக்கு சாப்பாடு போட்டுட்டு இருந்தாங்க. பெரிய படிப்பறிவும் வழிகாட்டுதலும் இல்லாத அந்த கிராம மக்கள் தங்களுக்கு ஒரு நல்ல குரு கெடச்சதா நெனச்சு ரொம்பவே சந்தோஷப்பட ஆரம்பிச்சாங்க.அதனால அவங்க அந்த துறவிக்குனு மூங்கில்ல குடிசை ஒன்னும் அமைச்சுக் குடுத்தாங்க.அத ஏத்துக்கிட்ட துறவி அந்த குடில்லயே வசிக்க ஆரம்பிச்சாரு.அந்த துறவிக்கு உடைமைனு சொல்லிக்கிடுறதுக்குப் பெருசா ஒண்ணும் இல்ல, ரெண்டு காவி உடைகளும்,ஒரு கமண்டலமும் தான் அவரோட உடைமைகள்.அது நாள்வரை எந்தவொரு சிக்கலும் இல்லாம இருந்திட்டுருந்த துறவியோட வாழ்க்கைல மொதல் மொறைய ஒரு சிக்கல் எட்டிப்பார்த்துச்சு. அதாவது இவர் வச்சிருந்த ரெண்டு உடைகள்ல ஒண்ணுல எலி ஓட்டப் போட்டுருச்சு.நாள்போக்குல எலிகளோட தொல்லை தீர்ந்த பாடும் இல்ல.இந்த எலிகள் அட்டகாசத்தால ஒரு ஆடையையே இழக்க வேண்டி வந்துது அந்த துறவிக்கு.இத தெரிஞ்சுக்கிட்ட அந்த கிராம மக்கள் “நீங்க ஏன் ஒரு பூனைய உங்களோட வச்சுக்கக் கூடாது, இதுனால எலி தொல்லை இருக்காது இல்லயா….”அப்படினு யோசனை சொன்னாங்க.அந்த துறவிக்கும் அந்த யோசனை சரின்னு படவும் அந்த கிராம மக்கள்ட்ட இருந்தே ஒரு பூனைய வாங்கி வளர்க்க ஆரம்பிச்சாரு. பூனை வந்ததுக்குப் பின்னால எலி தொல்லை கொஞ்சம், கொஞ்சமா கொறய ஆரம்பிச்சுது. ஆனா இப்போ அடுத்த சிக்கல் உருவாச்சு. அதாவது அந்த பூனை வளர வளர அந்த பூனைக்குத் தேவையான பாலின் அளவும் அதிகமாக ஆரம்பிச்சுது.என்னதான் காட்டுல அங்க இங்கனு கெடைக்கிறது புடிச்சு சாப்டாலும் அதுலாம் அதுக்கு போதுமானதா இல்ல. இது அந்த துறவிக்கு ஒரு பெரிய தலைவலியா போச்சு,அவரோட கஷ்டத்த பார்த்த அந்த கிராம மக்கள் “ஐயா,நீங்க சம்மதிச்சீங்கனா,நாங்க உங்களுக்கு ஒரு பசுவ தாரோம், இதுனால நீங்க பாட்டுக்கு வேண்டிய மட்டும் பால கறந்து பூனைக்குக் குடுத்துட்டு, நீங்களும் உபயோகப்படுத்திக்கலாம், என்ன சொல்றீங்க…..”அப்படினு ரொம்ப அனுசரனையா கேட்டாங்க. துறவிக்கு அந்த யோசனையும் சரியா தான் பட்டுச்சு,அடுத்த நாளே அவரோட குடிலுக்குப் பசுவும் அனுப்பப்பட்டுச்சு.
இப்போ அடுத்த சிக்கல்…. பசு என்ன சும்மா பால் குடுக்குமா…..அதுக்கு வேண்டிய புல்லும் குடுத்து,தண்ணி காட்டு ணமில்லையா…..இதனால அந்த துறவி தெனமும் இந்த கிராமத்துக்கு இந்து மாட்டுக்குத் தேவையான புல்லையும், வைக்கோலையும் எடுத்துட்டுப் போக வேண்டியதா இருந்துது.இத பார்த்த அந்த கிராம மக்கள் “இதென்னது, ஒரு துறவி போய் இப்படி புல்லுக்காகவும்,வைக்கோல்கா கவும் அலையுறதா…..இது நல்லாவா இருக்கு….”அப்படினு அநியாயத்துக்கு பச்சாதாபப் பட ஆரம்பிச்சாங்க. அதுக்கு அந்த துறவி,”நா வேற என்ன பண்ண முடியும், இந்த பசு, பூனையோட பசிய நா போக்கணும்ல….அப்போதான் அந்த கிராமத்துப் பெரியவரு ஒருத்தர் ஒரு யோசனை சொல்றாரு.”அ….எங்க கிராமத்துல எனக்குத் தெரிஞ்ச ஒரு விதவைப் பொண்ணு இருக்கா,ரொம்ப நல்ல பொண்ணு,வேலையெல்லாம் பிரமாதமா பார்ப்பா,அவ புருஷன் போயி ரெண்டரை வருஷத்துக்கு மேல ஆவுது. அவளுக்கு சொந்தபந்தம்னு சொல்லிக்கவும் யாரும் இல்ல. உங்களுக்கு ஆட்சேபனை எதுவும் இல்லனா அந்த மாட்ட பாத்துக்கற வேலைய அவ பார்த்துப்பா.நீங்க இப்படி கஷ்டப்படவேண்டாம்”
துறவிக்கு இந்த யோசனையும் ஒண்ணும் தப்பா படல.அதனால இதுக்கும் சம்மதிச்சாரு.அவளும் சம்மதிக்க துறவியோட குடில் பக்கத்துலயே அவளுக்கும் இடம் ஒதுக்கப்பட்டுச்சு.தெனமும் கிராமத்துக்கு வந்து புல்ல சொமந்துகொண்டு போறது ஒரு பக்கம் இருந்தாலும், அவங்களோட குடிலுக்குப் பக்கத்துலயே ஒரு காலி இடத்துல புற்களையும்,சில தானியங்களையும் பயிரிட ஆரம்பிச்சா. தனக்காக நிலத்துல கடுமையா உழைக்கிற அவள பார்த்து பரிதாபப்பட்ட துறவி, தானும் நெலத்துல இறங்கி பயிரிட ஆரம்பிச்சாரு.ரெண்டு பேரோட உழைப்பின் பலனா சில நாட்கள்லயே பயிர்களெல்லாம் வளர ஆரம்பிச்சது. அந்த துறவிக்கு தேவையான உணவ கிராமத்து மக்கள் கிட்ட இருந்து வாங்காம அவங்க அறுவட பண்ணினதுல இருந்து அவளே சமைச்சு போட ஆரம்பிச்சா.. நாளடைவுல அந்த துறவி ஒரு சராசரொ மனிதனா குடும்ப வாழ்க்கையையே வாழ ஆரம்பிச்சுட்டார். சில மாதங்கள்ல அவரூக்கு ஒரு கொழந்தையும் பொறந்துது.
அப்புறம் ஒரு நாளு தன்னோட வாழ்க்கைய பத்தி சிந்திக்கும்போது தான் அவருக்கு ஒரு உண்மை புலப்பட்டுச்சு. தான் எந்த நோக்கத்துக்காக இந்த கிராமத்துக்கு வந்தேன், இப்ப என்ன பண்ணிக்கிட்டுருக்கிறேன்…..? நா என்னோட குடும்பத்தவிட்டுட்டு ஒரு தவ வாழ்வ தேடி இங்க வந்தேன், ஆனா நா எந்த வாழ்க்கைத் தனக்குத் தேவை இல்லனு விலகி வந்தேனோ இப்பவும் அதே வாழ்க்கையத்தான வாழ்ந்துட்டுருக்கிறேன். ரெண்டுக்கு என்ன பெரிய வித்தியாசம்…? இத புரிஞ்சுக்க எனக்கு இத்தன வருஷம் தேவப்பட்டுருக்கே….. அப்படினு மனசு நொந்துபோனாரு……
கண் கெட்டப் பின் சூரிய நமஸ்காரம் பண்ற மாதிரி இப்ப வருந்தி என்ன லாபம்…..? அந்த கிராம மக்கள் எல்லாரும் இவர பத்தி கேலியும்,கிண்டலுமா பேச ஆரம்பிச்சது பொறுக்காம அந்த இடத்த விட்டு வேற ஊருக்கு வந்துட்டாரு. சில வருடங்கள் கழிச்சு, அவர் பிள்ளை வளர்ந்ததுக்கு அப்புறம் குடும்பத்துக்கு தேவையானத எல்லாம் பண்ணிட்டு திரும்பவும் துறவறம் மேற்கொள்ள புறப்பட்டாரு.
உங்கிட்ட பூனைய உள்ள விடாதானு சொன்னது நிஜ பூனைய இல்ல.. நீ உன் குறிக்கோள நோக்கி போகும் போது உனக்கு வரக்கூடிய இடயூறுகள.. கவனசிதறல்கள.. ஒரு தடவ நீ அதுக்கு இடம் கொடுத்துட்டா போதும், இந்த மனசு இருக்கே அது உன்ன ஒரு நிலைல இருக்க விடாது.. உன் குறிக்கோளயே மறந்து போற அளவுக்கு அது அலைபாய ஆரம்பிச்சுடும்..
இத தன்னோட வாழ்க்கைல கத்துக்கிட்டதால தான் உன்னையும் எச்சரித்திருக்குறாரு உன்னோட குரு. மற்ற சீடர்கள வழிநடத்த தகுதியானவனா உன்னைத் தேர்ந்தெடுத்து உன் மூலமா அவங்களுக்கும் இத கற்பிக்கணும்னுதான் உன்கிட்ட இந்த செய்திய தெரிவிச்சிருக்காரு அப்படினு கதைய சொல்லி முடிச்சாரு அந்த மூத்த குரு.
மனச அலைபாயவிடக்கூடாதுங்கறது நாம எல்லாருக்கும் தெரியும். ஆனா அத எப்படி செயல்படுத்தறதுனு தெரியாதே.. அத நம்ம வள்ளுவர் சொல்லிருக்கார்.
முடிவும் இடையூறும் முற்றியாங்கு எய்தும்
படுபயனும் பார்த்துச் செயல்
(அதிகாரம்:வினைசெயல்வகை குறள் எண்:676)
முடிவும்-முற்றுப் பெறுதலும்; இடையூறும்-தடையும்; முற்றியாங்கு-முடிந்த பொழுது; எய்தும்-அடையும்; படு-பெரும்; பயனும்-விளைவும்; பார்த்து-தெரிந்து; செயல்-செய்க.
ஒரு செயல செய்யும் போது அதோட முடிவு என்னவாயிருக்கனும், அத எப்ப முடிக்கனும், அந்த முடிவ நோக்கி போகும் போது வரக் கூடிய இடையூருகள் என்ன என்ன, அதை எல்லாம் கடந்து அந்த செயல முடிக்கும் போது அடையக் கூடிய பயன்/நன்மைகள் என்னங்கறத தெளிவா தெரிஞ்சு வச்சிட்டு நாம செயல தொடங்கனும்னு வள்ளுவர் சொல்றார்.
சில நேரங்கள்ல வர்ர இடையூறுகள இடையூறுகள்னு தெரியாமையே நாம அதுக்கு இடம் கொடுத்துடுவோம்., இந்த துறவி மாதிரி. துறவு மேற்கொண்டு மோட்ஷத்த அடையறது தான் அவரோட முடிவு.. அத மேற்கொள்ளும் பூனைய வளர்க்கறது, அது மேல ஒரு பற்று உண்டாவது, அதுக்கு உணவு கொடுக்க மாடு வாங்கறது, இது எல்லாம் இடயூறுகள்னு அவருக்கு தெரிஞ்சிருந்தா ஆரம்பத்துலயே அத தடுத்திருக்கலாம்.
நாம நம்ம குறிக்கோள்ல இருந்து தவறிப் போறது சில நேரங்கள்ல நம்மள சுத்தி இருக்கிறவங்களோட தாக்கத்துனால கூட ஏற்படலாம். ஒரு வேலைய முடிக்குனும்னு நீங்க உட்காரும் போது , “எவ்ளோ நேரம் வேலை செய்வ.. வா ஒரு அரை மணி நேரம் போய் ரிலேக்ஸ் பண்ணிட்டு வருவோம்” அப்படினு கூப்டுவாங்க..அதோட அந்த வேல நின்னு போயுடும்.
வள்ளுவர் சொல்ற மூன்று விடயங்கள்.. 1. முடிவும்.. நாம செய்யக் கூடிய செயலோட முடிவு எப்படி இருக்கனும்ங்கற தெளிவும், 2. இடையூறும்.. அது செய்யும் போது என்னென்ன இடரூறுகாள் வருங்கற தெளிவும்.. 3. முற்றியாங்கு எய்தும் படுபயனும்.. சில நேரங்கள்ல எல்லாம் ஒழுங்கா போயிட்டு இருந்தாலும் இந்த மனசு, “செ! இவ்ளோ கஷ்டப்பட்டு இந்த காரியத்த நாம செய்யனுமா அப்படினு நம்மள பேக் அடிக்க வைக்கும்.. அப்போ இந்த செயல செஞ்சு முடிக்கும் போது நீங்க அடையக்கூடிய பலன நெனச்சு பார்த்தீங்கன்னா நிச்சயம் உங்க முயற்சில பின் வாங்காம, அலை பாயுற மனத கட்டுப்படுத்தி அத செஞ்சு முடிப்பீங்க..
இவ்ளோ சொல்றாங்க.. அப்போ இவுங்க எவ்ளோ கட்டுக்கோப்பா இருப்பாங்கனு மட்டும் தப்பா நெனச்சுறாதீங்க.. இந்த பதிவு script அ எழுதறதுக்குள்லயே என் மனசு ஒரு இடஹ்த்டுல கவனம் செலுத்தாம இமயத்துக்கும் குமரிக்கும் தாவிட்டு இருந்துது. உங்களோட சேர்ந்து நானும் கொஞ்சம் கொஞ்சமா மனச கட்டுப்படுத்த முயற்சி பண்றேன்னு சொல்லிட்டு இந்த பதிவ நிறைவ செஞ்சுக்கிடுறேன்.
நீங்க ஒரு செயல செய்யும் போது உங்க மனசு எதுல எல்லாம் அலைபாயும்னு கண்டிப்பா Comment ல சொல்லுங்க.
தற்காலிக சிக்கல நிவர்த்தி பண்றதுக்காக தான் சில காரியங்கள் செஞ்சு, நிரந்தரமான சிக்கல்ல மாட்டிக்கிட்டத புரிஞ்சுக்கிட்டாரு.அதோட இந்த மனசோட இயல்பு இருக்கே அது தனக்கு செளகரியமா படுற ஒரு விஷயத்த கண்டா அத கெட்டியா புடிச்சுக்கும். அதோட அந்த செளகரியத்துக்குப் பழகி மென்மேலும் அது போன்ற செளகரியங்கள எதிர்ப்பார்க்கும். இதுனால தன்னோட குறிக்கோளையே கூட மறந்திடுற அளவுக்கு அந்த விஷயத்துக்கு மயங்கிப் போயிடும்.