இசை! இசைக்கு மயங்காதவங்க இந்த உலகத்துலையே கெடையாதுங்கிறதுக்கு சாட்சியா இசை பிரியர்கள் உலகம் முழுக்க பரவி இருக்காங்க. வாழ்க்கைல மகிழ்ச்சியா இருந்தா அதுக்கு ஒரு பாட்டு, சோகத்துக்கு ஒரு பாட்டு, அழுகைக்கும் கண்ணீருக்கும் ஒன்னு, அன்றாட வாழ்க்கைல நம்மள ஓட வைக்கிறதுக்கு ஒன்னுன்னு இசை நம்ம வாழ்க்கை நிகழ்ச்சிகள்ல இருந்து பிரிக்க முடியாத ஒண்ணா மாறிப்போச்சி. ஆனா அதே இசைக்கு, “இசைய வைப்பது” ன்னு ஒரு பொருளும் இருக்கு. அப்படிபட்ட இசை ஒருத்தர தற்கொலைக்கு தூண்டும்ன்னு சொன்னா நாம யாருமே நம்ப மாட்டோம். ஆனா இசை ஒருத்தரோட மனநிலைய மாற்றும் அளவுக்கு ஆற்றல் வாய்ந்ததா இருப்பதனால தான் நம்மள சிரிக்கவும் வைக்குது. சிந்திக்கவும் வைக்குது. அப்போ தற்கொலையும் செய்ய வைக்கும் தானே?
இசையின் இருண்ட பக்கங்கள்!
100 – க்கும் அதிகமான உயிர்களை ஒரு இசையினாலே எடுத்துக்க முடியுது. அந்த பாட்டு தன்னை எழுத்துனவங்க உயிரையே வாங்குற அளவுக்கு வலிமை வாய்ந்ததா இருக்கு. அப்படி அந்த ஒரு இசைல, அந்த ஒரு பாட்டுல என்ன தான் இருக்கு?…
அந்த பாட்டுக்கு “GLOOMY SUNDAY” ன்னு பேரு. ஒரு 89 வருஷத்துக்கு முன்னால, லாஸ்லோ ஜாவர் என்பவரோட சிந்தனைல உதயமாகி, ரெசோ செரெஸ் என்கின்ற இசையமைப்பாளரால வடிவமைக்கபட்டு 1933 ஆம் வருடம் இந்த பாட்டு ஹங்கேரியால வெளிவருது. அந்த பாட்டு வெளி வந்து கொஞ்ச நாட்களிலேயே கேட்பவர்கள் மத்தியில பெரும் தாக்கத்தை உண்டாகுது. அந்த தாக்கம் என்னனா தற்கொலைகள்!. ஜோசப் கெல்லர் என்கிற கூலி தொழிலாளி ஒருத்தர் ஹங்கேரியால தற்கொலை செஞ்சுக்கிறாரு. இது மட்டுமில்லாம வேற ஒரு ரெண்டு பேரு தங்கள தாங்களே துப்பாக்கியால சுட்டுகிட்டு இறந்தும் போறாங்க. இந்த தற்கொலை – களுக்கான காரணத்த கண்டு புடுச்சப்போ தான் தெரிஞ்சது அவங்க இறந்து கெடந்த எடத்துல அந்த பாடல் வரிகள் கொண்ட காகிதம் இருந்தத. இவரு மட்டுமில்ல கிட்டத்தட்ட 18 க்கும் மேற்பட்டோர் தற்கொலை செஞ்சுகிட்டாங்க ஹங்கேரில மட்டும்!. உலக வரலாற்றிலேயே அதிகமாக தற்கொலைகள தூண்டுற பாடல் இது தான்னு சொல்லி 1937 – வது வருஷம் இந்த பாட்டு ஹங்கேரி நாட்டுல தடை செய்யப்படுது. அதுல இருந்து இந்த பாட்டு GLOOMY SUNDAY – Hungarian Suicide Song – ன்னு அடையாளப்படுத்தப்படுது.
ஆனா 1936 – வாக்குல சாம் லிவிஸ் என்கிற எழுத்தாளர் மூலமா இந்த பாட்டுக்கு ஆங்கிலத்துல உயிர் குடுக்கப்படுது. அதற்கு அப்பறமா தான் இந்த பாடல் உலக அளவுல கவனிக்க தக்கதா மாறுது. அமெரிக்கா, லண்டன்னு பல நாடுகளிலேயும், வயசு வித்யாசம் இல்லாம இந்த பாடலினால தற்கொலைகளோட எண்ணிக்கையும் அளவு கடந்து போய்ட்டு இருக்கு. இது ஒரு பக்கம் இருக்க இன்னொரு பக்கம் நியூ யார்க் டைம்ஸ் – ல வெளிவந்த கட்டுரை ஒன்னுல US – ல நடந்த ஒரு தற்கொலைக்கு இந்த பாடல் தான் காரணமா இருந்திருக்குன்னு நிரூபணம் செஞ்சுருக்காங்க.
இதுக்கு அப்பறம் தான் பாடலோட இசையமைப்பாளர் – ஐ ஒரு முறை உக்ரைன் – ஐ சேர்ந்த ஒரு குழு பேட்டி எடுக்குறாங்க, அந்த நேர்காணல்ல, ரெசோ செரெஸ் என்ன குறிப்பிடுகிறார் என்றால், “இந்த பாடல் இவ்வளவு தூரத்துக்கு தாக்கத்தை ஏற்படுத்தும்ன்னு நாங்க நெனைக்கல, இந்த பாடல வடிவமைக்கும் போது தான் என்னோட அம்மா இறந்து போனாங்க. ஆனா நான் என்னோட முழு ஆன்மாவையும் இந்த பாடலுக்காக அர்ப்பணிப்பு செஞ்சிருக்கேன். உண்மையா சொன்னா தனிமைல கேட்கும் போது கேட்பவர்கள் மன அழுத்தத்தோட உச்ச கட்டத்த அடைவாங்க!” அப்படின்னு சொல்லிருக்காரு.
ஆனா கொஞ்ச நாட்கள் கழிச்சி பாடலோட ஆசிரியர் தற்கொலை செஞ்சுக்கிறாரு. அவரோட மனைவி விவாகரத்து வாங்கிட்டு போனது தான் அதற்கு காரணம்ன்னு செல்லப்பட்டாலும் அவரு எழுதி வச்சிருந்த கடிதத்துல, “நடந்த எல்லா தவறுகளுக்கும் நான் தான் குற்றவாளியா இருந்திருக்கேன். இது எல்லாத்துலையுமே முதன்மை வகிப்பது நான் தான்” – ன்னு அந்த கடிதத்தில குறிப்பிட்டுட்டிருக்காரு.
இந்த பாடலுடைய தொடக்கத்துல மிக மெல்லியதாக வரக்கூடிய இசை, போக போக கேட்க கூடியவர்களுடைய மனநிலைய மாற்றக்கூடிய அளவிற்கு அமைந்திருப்பது தான் இத்தனை துக்கங்களுக்கும் காரணமாக பார்க்கப்படுது. அந்த பாடல் வரிகளுடைய சாராம்சமே “உலகம் முடிவடைகிறது” என்பதை மையப்படுத்தி, போரினால் ஏற்பட்ட விரக்தியைப் பற்றியும் மக்களின் பாவங்களைப் பற்றிய அமைதியான முறையில் பிரார்த்தனை செய்வதாக முடியுது. எவ்வளவு காலம் கடந்து வந்து இன்னைக்கு நாம இங்க நின்னாலும் அந்த இசையினுடைய தாக்கம் இன்னும் மறைந்தபாடு இல்லையே!
நமக்கு புரியிற மொழில சொன்னா…
“இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்”
“எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே”
இதில் குறிபிடதகுந்த விஷயம் என்னவென்றால் இந்த பாடல் இன்றும் யுட்யூப்பில் இருக்கிறது. பாடலை கேட்பவர்கள் எந்தவித விபரீத செயல்களிலும் ஈடுபட மாட்டீர்கள் என நம்புகிறேன்.
நன்றி !
தொடர்புடயவை: உலகையே நடுங்க வைத்த ரஷ்யாவின் கொடூர ஆராய்ச்சி