தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் உடலுக்கு மிக முக்கியமான இன்சுலினை தூண்டி வேலை செய்ய வைக்கிறது.

இளநீர் என்பது வெயில் காலம் மட்டுமன்றி அனைத்து பருவநிலைகளிலும் மக்கள் அருந்துகின்றனர். காரணம் அதில் உள்ள மினரல்கள் உடலுக்கு தேவையான ஆற்றலை அளிக்கின்றன. அந்த வகையில் தினமும் இளநீர் அருந்துவதன் நன்மைகள் தீமைகள் பற்றி விரிவாக அலசுகிறது இந்தக் கட்டுரை.
வெயில் காலத்தில் இளநீர் தவிர்க்க முடியாத தேவை. அது வெயிலின் வெப்பத்தைத் தனிக்கக் கூடிய இயற்கை நீர். ”வெயில் காலத்தில் உடலுக்குத் தேவையான எலக்ட்ரோலைட்ஸ் நீர்சத்து மூலமாக வெளியேறுகிறது. அதை மீண்டும் உடலுக்கு அளிக்க இளநீர்தான் சரியான உதவுகிறது. உடலுக்குத் தேவையான பொட்டாசியம் , சோடியம், கால்சியம் போன்ற மிரல்ஸ் மூலமாக எலக்ட்ரோலைட்ஸ் கிடைக்கின்றன “ என்கிறார் ஊட்டச்சத்து நிபுணர் பிரீத்தி ராஜ். இவர் வூட்டு நியூட்ரீஷியன் கிளீனிக்கின் நிறுவனர் மற்றும் மருத்துவராக இருக்கிறார்.
இளநீரை தினமும் அருந்துவதால் ஆபத்து என்பதெல்லாம் உண்மை கிடையாது என்று பிரீத்தி ஒரு ஆய்வையும் மேற்கோள் காட்டுகிறார். ”அதில் தொடர்ந்து 60 நாட்கள் இளநீர் அருந்துவதால் உடல் எடைக் குறைவதைக் கண்டறிந்துள்ளனர். மேலும் உடலுக்கு மிக முக்கியமான இன்சுலினை தூண்டி வேலை செய்ய வைக்கிறது. அதை தூண்டுவதற்கான ஊட்டச்சத்து இளநீரில் அதிகம் என்கிறது அந்த ஆய்வு”.
அதேபோல் இளநீரில் சர்க்கரையின் அளவு அதிகம் என்னும் வதந்தியும் பரப்பப்படுகிறது. அதற்கு பிரீத்தி “ எத்தனைப் பெரிய இளநீராக இருந்தாலும் அதில் அதிகபட்சமாக 250 ML சர்க்கரைதான் இருக்கும். இதே நீங்கள் மற்ற சாஃப்ட் ட்ரிங்குகளை குடிக்கும்போது அதில் குறைந்தபட்சம் 20 டீஸ்பூன் சர்க்கரை இருக்கிறது. இளநீர் கார்போஹைட்ரேட்டுகளும் குறைவக இருப்பதால் உடலுக்கு ஆரோக்கியமானதே என்கிறார்.

இளநீர் அருந்தும் முறை :
இளநீரை அருந்தும்போது வெறும் நீரை மட்டும் குடிக்காமல் அதன் வழுக்கையையும் சேர்த்து உண்ண வேண்டும்
“ இளநீரின் சத்து முழுமையாக உடலுக்குக் கிடைக்கவேண்டுமெனில் வழுக்கையோடு சேர்த்து குடிக்க வேண்டும். இளநீரில் பொட்டாசியம், கால்சியம் இருந்தாலும் வழுக்கையில் மற்ற ஊட்டச்சத்துகள் அதிகமாக இருக்கின்றன. உதாரணமாக உடலுக்குத் தேவையான கொழுப்புச் சத்து, சருமத்தை பளபளக்கச் செய்யும்
வைட்டமின்கள், உடல் எடையைக் குறைக்கக்கூடிய ஆற்றல் சத்துகள் போன்றவை அதிகமாக இருக்கின்றன. வெளிநாடுகளிலும் இளநீரை அருந்தியபின் வழுக்கையை உணவுபோல் உண்ணுகின்றனர். விளையாட்டுப் பயிற்சியாளர்கள் மற்றும் உடற்பயிற்சியாளர்களும் இந்த முறையையே பின்பற்றப்படுகிறது.” என்கிறார்.
நீரிழிவு நோயாளிகள் இளநீர் அருந்தலாமா? என்ற கேள்விக்கு “ தாராளமாக அருந்தலாம். ஆனால், அவர்கள் தங்களின் உணவு முறையில் கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். அப்படி இருக்கும்பட்சத்தில் பிரச்னை இல்லை. அவர்கள் இளநீரை மட்டும் குடிக்காமல் வழுக்கையையும் சேர்த்து உண்ணும்போது இரத்தத்தில் உள்ள குளுகோஸைக் கட்டுப்படுத்தும். இது சர்க்கரையை விட ஆபத்து இல்லை. குறிப்பாக செவ்விளநீர் அருந்துவது இன்னும் நல்லது” என்கிறார்.
இன்று பலருக்கும் இதயப் பிரச்னை, இரத்தக் கொதிப்பு போன்ற பிரச்னைகள் பொட்டாசியத்தின் குறைப்பாடால் ஏற்படக் கூடியது. இதைத் தவிர்க்க இளநீர் தினமும் அருந்துவது நல்லது.
இரத்தக் கொதிப்பு உள்ளவர்களுக்கு அதிகமாக கால்சியம் மற்றும் பொட்டாசியம்தான் அதிகமாகத் தேவைப்படும். அவர்களுக்கும் இந்த இளநீர் நல்ல மருந்தாக இருக்கும். சிறுநீரகக்கல் பிரச்னை வராமலும் தடுக்கும் எனக் குறிப்பிடுகிறார். குறிப்பாக பெண்களுக்குதான் சிறுநீரகப் பிரச்னை அதிகமாக ஏற்படுகிறது. அவர்கள் இளநீரை எடுத்துக் கொள்வது நல்லது எனவும் பரிந்துரைக்கிறார்.

ஆஸ்துமா பிரச்னை உள்ளவர்கள் வெயில் நேரத்தில் இளநீர் குடிக்கலாம். வெயிலில்லாத காலை மற்றும் மாலையில் அருந்துவதைத் தவிர்க்கலாம்.
கர்பிணிகள் உடலுக்கு எந்தப் பிரச்னையும் இல்லை. ஆரோக்கியமாக இருக்கிறார் எனில் இளநீர் அருந்தலாம். அவர்களுக்கு ஏதேனும் உடல் ரீதியான பிரச்னைகள் , அதற்குரிய மருத்துவம் எடுத்துக் கொள்கிறார்கள் எனில் அவர்கள் இளநீர் எடுத்துக் கொள்வதைத் தவிர்க்கவும். இல்லையெனில் மகப்பேறு மருத்துவரின் அறிவுரைப்படி அருந்தலாம் என்கிறார் பிரீத்தி.
தீமைகள் குறித்த கேள்விக்கு “இளநீர் அருந்துவதால் தீமைகள் என்பது மிகக் குறைவு. சிறுநீரகக் கோளாறு உள்ளவர்கள் இளநீர் அருந்தக் கூடாது. அதேபோல் நீர் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்னும் கட்டுப்பாடு உள்ளவர்கள், கால் நீர் கோர்த்து வீக்கம் ஏற்படும் பிரச்னை கொண்டோர், நட்ஸ் அலர்ஜி , இதயப் பிரச்னை உள்ளவர்கள், பொட்டாசியம் மற்றும் சோடியம் அதிகம் எடுத்துக் கொள்ளக் கூடாது என்னும் கட்டுப்பாடு உள்ளவர்கள் இளநீர் அருந்துவதைத் தவிர்க்க வேண்டும்” என்கிறார்.
ஒரு நாளைக்கு எத்தனை இளநீர் அருந்தலாம் என்ற கேள்விக்கு “ ஒரு நாளைக்கு ஒரு இளநீர்தான் அருந்த வேண்டும். அதிகபட்சமாக 250 – 300 ML இளநீர் அருந்தலாம். அதிகமாக அருந்தினால் உடலின் தேவைக்கு மீறிய பொட்டாசியம் மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகரிக்கும். பின் அதற்குறிய பக்கவிளைவுகள் ஏற்படலாம். ஆரோக்கியமான உடல் கொண்டவர்கள் அதிகபட்சமாக இரண்டு இளநீர் அருந்தலாம் “