தற்போது நவீன காலத்தில் பயன்படுத்தப்படும் பல பொருட்கள் கடந்த காலத்தில் இருந்ததாக பலர் சொல்வதுண்டு. ஆனால், அவர்களிடம் அதற்கான ஆதாரம் எதுவும் இதுவரை இருந்ததில்லை. விஞ்ஞானிகளும் இந்த கூற்றுகளை உண்மையாக கருத மாட்டார்கள்.
இப்போது ஒரு புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. மிரர் அறிக்கையின்படி, இந்த படம் செப்டம்பர் 1943-ல் எடுக்கப்பட்டது. அதாவது 80 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட புகைப்படம். இதில், கடற்கரையில், பழுப்பு நிற உடையில் உயரமான மனிதர் ஒருவர் கையில் மொபைல் போனை வைத்து பயன்படுத்துவதாகவும் அவர் டைம் ட்ராவல் மூலம் முன்பிருந்த உலகத்தைப் பார்க்க நிகழ்காலத்தின் மனிதன் வந்திருப்பதாகவும் ஸ்டூவர்ட் ஹம்ப்ரீஸ் என்ற நபர் சமூக வலைதளங்களில் பதிவிட்ட புகைப்படம் பெரிதும் வைரலானது.
இதற்கிடையே, நெட்டிசன்கள் பலரும் இதைக் குறிப்பிட்டு கேள்விகளைக் கேட்கத் தொடங்கினர். 80 வருடங்களுக்கு முன் மொபைல் போன் இல்லை, பிறகு எப்படி இவர் மொபைல் போன் பயன்படுத்துகிறார்? 1950களில் கூட மொபைல் இல்லை, அவர் எதேனும் சீட்டைப் பார்த்துக்கொண்டிருக்க வாய்ப்பு இருக்கிறது என்றார் ஒரு பயனர். மற்றொருவர், டைம் ட்ராவலுக்கான ஆதாரம் கிடைத்தது என்றார். பெரும்பாலான நெட்டிசன்கள், இந்த கூற்றை ஏற்கவில்லை. அந்த நபர் கையில் வேறு ஏதேனும் வைத்து பார்த்துக் கொண்டிருக்ககூடும்; அதை தொலைவில் இருந்து பார்க்கையில் கையில் மொபைல் வைத்திருப்பதை போல தெரிகிறது என்று கூறினர்.
இதேபோல சமீபத்தில் ஒரு சிலையின் புகைப்படம் சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகி விவாதத்தை கிளப்பியது. ஒரு பெண் நாற்காலியில் அமர்ந்திருக்க, நின்று கொண்டிருக்கும் சிறுமியின் கையில் லேப்டாப் மாதிரியான ஒன்று இருந்தது. இதனால், டைம் டிராவல் மீது நம்பிக்கை கொண்ட மக்கள் மத்தியில் ஒருவித பீதியை ஏற்படுத்தியது.
USB போர்ட் போன்ற துளைகளும் அதன் பக்கங்களில் காணப்பட்டதால் நெட்டிசன்கள் இடையே பெரும் விவாதமே கிளம்பியது. இது டேப்லெட்டா அல்லது டைம் டிராவல் பயணி தனது மடிக்கணினியை எடுத்துச் சென்றாரா என்றும் விவாதம் கிளம்பியது. இருப்பினும், இது முகம் பார்க்கும் கண்ணாடியாக இருக்கலாம் என்றும் பலர் நம்புகிறார்கள்.