பிரிட்டிஷ் இந்தியாவை அடிமைபாடுத்திய வாரலாறு how british ruled india in tamil

இதுவும் மிகப்பெரிய பதிவாக இருக்கப்போகிறது.. ஆனால் சுருக்கமான செய்திகள் மட்டுமே.

அக்காலத்தில் பல நாடுகளின் ஆட்சியாளர்களும் இந்தியாவை நோக்கியே தங்கள் பார்வையை வைத்து..ஏக்கத்தோடும் ஆசையோடும் பார்த்ததற்கான காரணங்களை பார்த்தே ஆக வேண்டும்..

தங்கப்பறவை:

நாம் நினைப்பது போல் இந்தியா வெறும் விவசாய நாடாக இருக்கவில்லை.. அக்கால இந்தியா மெசபடோமியா, பாரசீக வளைகுடா, மற்றும் தென் கிழக்கு ஆசிய நாடுகளோடு கப்பல் மூலமாக வாணிகம் செய்து பெரும் பொருள் ஈட்டிக் கொண்டிருந்தது. மசாலாப் பொருட்கள், வாசனை திரவியங்கள், கைத்தறி ஆடைகள், பட்டு , பருத்தி, கம்பளி, லினன் போன்ற பிரசித்தி பெற்ற ஆடைகள், ஆபரணங்கள், அருமையாக பட்டை தீட்டப்பட்ட நவரத்தினங்கள், மட்பாண்டங்கள், பலவிதமான வண்ணங்களில் தரமிக்க தரை, சுவர் ஓடுகள், பீங்கான் பொருட்கள், மட்பாண்டங்கள், இரும்பு, உருக்கு, வெள்ளியால் ஆன பொருட்கள், கப்பலுக்கு தேவையான கருவிகள், சிறந்த கட்டிடக்கலை , பொறியியல் வேலைப்பாடு, பெரும் வணிகர்கள், வங்கியாளர்கள் , பொறியியல் வல்லுநர்கள் என சர்வ லட்சணமும் நிறைந்த ஒரு உயர்தரமான செல்வம் பொருந்திய நாடாக இருந்தது.. கப்பல் கட்டுமானத்திலும் தலைசிறந்து விளங்கியது. தங்கமும் வைரமும் கொட்டிக் கிடந்த ஒரு நாடு.. நிலம், நீர் வழியாக பல நாடுகளுடனும் வாணிபம்..சொன்னால் நம்ப முடிகிறதா? முதலில் ஐரோப்பாவும் நம்பவில்லை..

பிரிட்டிஷ் தொழிலதிபர் ரால்ஃப் ஃபிட்ச் மேற்கண்ட நாடுகளில் வியாபார நிமித்தமாக பயணம் மேற்கொண்ட போது, இந்தியாவைப் பற்றி கேள்விப்பட்டார். இவர் இந்தியா மற்றும் கிழக்கத்திய நாடுகளில் இருந்து மசாலா பொருட்களை வாங்குவதற்காக கடல் பயணம் மூலம் முயன்று கிடைத்தது தோல்விதான்.. ஏனெனில் கடல் வழி தெரிந்திருக்கவில்லை. ஆனாலும் பலராலும் தங்கப் பறவை என்று புகழப்பட்ட இந்தியாவை அடையும் ஆர்வம் இன்னும் அதிகமாகியது.( மாமிச உணவுகள் செரிமானத்திற்கு மசாலா பொருட்கள் அவசியம்.. அதோடு அந்த மக்கள் அனைவரும் மாமிச பட்சிணிகள்.. எனவே தேவையும் அதிகம்..பண்டைய காலத்தில் தங்கத்தை கொடுத்து மசாலாவை வாங்கி இருக்கிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். ( இப்போது இந்தியர்களிடம் தங்கத்தை விற்று.. அவர்கள் தலைகளில் மசாலா அரைத்துக் கொண்டிருக்கிறார்கள்)

1591 .. மூன்று கப்பல்கள் நன்னம்பிக்கை முனையை சுற்றி இந்தியா செல்ல முயன்று.திசை மாறி மலாக்கா ஜலசந்தி வரை சென்று மல்லாக்க திரும்பியது. 1596 ல் மேலும் மூன்று கப்பல்களோடு சென்றவர்கள் கடலில் மூழ்கி அவரது பொன்னாசையில் மண்ணள்ளிப் போட்டார்கள் . ஆனால் போர்ச்சுக்கல் மன்னன் 1 ம் இமானுவேல் வாஸ்கோட காமா தலைமையில் வணிக கப்பல்களை அனுப்ப , அவர் ஒரு வழியாக 1498 ல் கேரளாவில் கோழிக்கோடு பகுதியில் காப்பாடு கடற்கரையை அடைந்தார்.. இந்தியாவை ஐரோப்பாவில் இருந்து ஆப்பிரிக்காவின் தென் முனையைச் சுற்றி அடையலாம் என்ற நம்பிக்கை பிறந்ததால் அதற்கு நன்னம்பிக்கை முனை என்று பெயரிடப்பட்து.. ( cape of good hope )அப்போது சூயஸ் கால்வாய் கிடையாது. பிள்ளையார் உலகைச் சுற்றி வந்தது போல் அனைவரும் சுற்றி சுற்றி வலம் வந்து தான் அடைய முடிந்தது. இந்தியா மிகவும் புகழ் பெற்று இருந்ததால் தான் இந்தியப் பெருங்கடல் எனவும் குறிப்பிட்டனர்.

இதன் பிறகு அப்பகுதியில் உள்ள மன்னன் அவர்களை வரவேற்று உபசரித்தான்..ஆனால் அவர்களை வியாபாரம் செய்ய அனுமதிக்க மறுத்ததால்.. போர்ச்சுக்கல் மன்னன் 1 ம் இமானுவேல் தனது படையை அனுப்பவே.. மன்னன் தோல்வி அடைய, சில இடங்களைப் பிடித்து முதன் முறையாக இந்தியாவில் போர்ச்சுக்கல் தனது வலது கால் வைத்து நுழைந்தது. 1505 முதல் வாணிபத்தில் லாபம் ஈட்ட ஆரம்பித்தது. . இவ்வேளையில் எந்தவொரு வளர்ச்சியும் இன்றி, வெறும் விவசாயம், கால்நடை வளர்ப்பில் மெலிந்த வயிறை நிரப்பிக் கொண்டிருந்த இங்கிலாந்தின் ராணியிடம் இந்தியாவை அடைய உதவி கோரப்பட்டது. உள் நாட்டு போரால் பாதிக்கப்பட்ட இங்கிலாந்து, வெறும் விவசாய நாடு.. வணிகர்கள் போர்வையில், போர்த்துக்கீசிய, ஸ்பெயின் வணிக கப்பல்களை கொள்ளையடிப்பது அதன் பொழுது போக்கு..

கடல் வழியே.. இந்தியாவுக்கு ஒரு டிக்கெட்:

கிபி 1600 டிசம்பர் 31 ல் முதலாம் ராணி எலிசபெத்.. ஜார்ஜ் ட்யூக் ஆஃப் கம்பர்லாண்ட் தலைமையில், 211 வீரர்களுடன் கிழக்கத்திய பகுதிகளில் வியாபாரம் செய்ய அனுமதி அளித்தார்.. அதாவது அனைத்துக்கும் அரசின் ஆதரவு. இறுதியில் 1608 ம் ஆண்டு.. கேப்டன் வில்லியம் ஹாக்கின்ஸ் ‘ ஹெக்டர் ‘ என்ற கப்பல் மூலம் சூரத் வந்திறங்கினார். அப்போது முகலாயர் ஆட்சி.. மன்னன் சலீம் என்ற ஜஹாங்கிர்.. அங்கிங்கெனாதபடி ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான், ஜம்மு காஷ்மீர், வங்கம், தெற்கில் தக்காண பீடபூமி வரை பரந்து விரிந்திருந்தது. 40 லட்சம் வீரர்களைக் கொண்ட மிகப்பெரிய படை.. வேறு வழியில்லை ஜஹாங்கீரிடம் காலில் விழாத குறையாய்.. கெஞ்சிக் கொண்டிருந்தார்.. அனுமதி கிடைக்கவில்லை. 1615 ல் இங்கிலாந்தின் அரச தூதர் சர் தாமஸ் ரோ ..விலை மதிக்க முடியாத பரிசு பொருட்களை வழங்கினார். அவருக்கு பிடித்த வேட்டை நாய்கள் மற்றும் உயர் ரக மதுவும் இதில் அடக்கம்.. ஆனாலும் மனிதர் மசியவில்லை.. வியாபாரம் பற்றி பேச்சை எடுக்கும் போதெல்லாம் குதிரை, கலைப் பொருட்கள், மது பற்றியே பேசிப் பேசி.. அந்த ஆங்கிலேயரை ஒரு வழி பண்ணிக் கொண்டிருந்தார்.. மூன்று ஆண்டுகள் கழித்து.. வணிகம் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது. ராஜ்ஜியத்தின் ஒவ்வொரு துறைமுகத்திலும் வியாபாரம் செய்யும் உரிமை, வணிகத் தளங்கள், நிலங்கள் வாங்க, விற்க உரிமை. பதிலுக்கு ஐரோப்பிய தயாரிப்புகள் வழங்க ஒப்புதல்..ம்க்க்கும்.. தயாரிப்பு என்று அப்போது இங்கிலாந்தில் லேது என்று மன்னருக்கு தெரியவில்லை என்பது வேறு விஷயம். அதோடு நிறுவனத்தின் கப்பல்களில் வரும் அனைத்து விதமான கலைப் பொருட்களும், பரிசுப் பொருட்களும் மனமுவந்து ஏற்றுக் கொள்ளப்படும்.. லஞ்சம்???

ஜஹாங்கிரின் அரசவையில் சர் தாமஸ் ரோ..

இந்தியாவில் இருந்து பருத்தி, இண்டிகோ, பொட்டாசியம் நைட்ரேட், தேயிலை போன்றவற்றை ஏற்றுமதி செய்து பொருள் ஈட்டியதோடு, தனது காலனி நாடுகளில் இருந்து ஸ்பெயின், அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அடிமைகளை விற்றும் கொள்ளை லாபம் சம்பாதித்தது.

1670 ல் இரண்டாம் சார்லஸ் வெளிநாடுகளில் போர்களை நடத்தி..காலனித்துவத்தை ஏற்படுத்த அனுமதி அளித்ததோடு, இங்கிலாந்து தனது உண்மையான பக்கத்தை காட்டியது..நிறைய ராணுவத்தையும் போர் கப்பல்களையும் அந்தந்த நாடுகளுக்கு அனுப்பியது. அதோடு தன்னுடன் போட்டியாக இருந்த பிரெஞ்சு, போர்த்துக்கீசியரின் ஆதிக்கத்தை படிப்படியாக குறைத்து, வங்க கடற்கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.

ஒண்ட வந்த பிடாரி:

1686 ம் ஆண்டு ஔரங்கசீப் மருமகன் ஷாயிஸ்தா கானின் அதிகாரிகள் ஆங்கிலேய கம்பெனிக்கு தொல்லை கொடுப்பதாக சார்லசிடம் புகார் தெரிவிக்க, உடனே 19 போர் கப்பல்கள், 200 பீரங்கிகள் போருக்காக புறப்பட்டு வந்தன. அதுவரை வியாபாரத்திற்காக காலடியில் கிடந்தவர்கள் .. படையெடுத்து நிற்பதை கண்டு ஔரங்கசீப் கொதித்துப் போனார். ஆங்கிலேயப் படைகளை விரட்டி விரட்டி நையப் புடைத்தனர்.. அவர்களது ஐந்து தொழிற்சாலைகளை அடித்து நொறுக்கினர்.. சூரத், மும்பை துறைமுகங்களிலுள்ள அவர்களது கிடங்குகள் சீலிடப்பட்டன.. பிடிபட்ட வீரர்கள் விலங்கிடப்பட்டு சாலைகளில் தர தர வென..வெள்ளைத் தோல் அவமானத்தால் சுருங்கிப் போயின.. உள்ளதும் போச்சுடா நொள்ளக்கண்ணா!! ..அதே வேளையில் ஔரங்கசீப்புக்கு சொந்தமான வாணிக கப்பல் ” ஃபத்தே முகமது” ” குலாம் சவாய்” கப்பல்கள் பிரிட்டிஷ் கொள்ளையர்களால் சூறையாடப்பட்டு, சுமார் ஏழு லட்சம் பவுண்ட் மதிப்புள்ள பொருட்களை சூறையாடி மேலும் கி.இ.கம்பெனிக்கு ஆப்பு வைக்க, ஔரங்கசீப் காலடியில் தொபுகடீர் என்று காலில் விழுந்தவர்..1690 வரை மன்னிப்பு கிடைக்கும் வரை ..எழவேயில்லை..

சீன அரசர் காலடியில் மண்டியிட்டு…

இதே காலகட்டத்தில் சீனாவுடன் வர்த்தகம் செய்வதற்காகவும் அங்குள்ள ஆட்சியாளர்களின் நெடுஞ்ஜான் கிடையாக விழுந்து..பொய்யில்லை மக்களே!! அப்படித்தான் விழ வேண்டும்..சீனர்களைப் பொறுத்தவரை .. உலகின் உன்னதமான வம்சத்தவர்கள் அவர்களே.. மற்றவர்கள் கீழானவர்கள்.. பலகட்ட மரணத்திற்கு பின் சில இடங்களில் வர்த்தகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டது.. சீனப் பொருட்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு தேவைப் பட்டதே ஒழிய, சீனர்களுக்கு எதுவும் தேவையில்லை.. பண்டமாற்று என்ற பேச்சுக்கே இடமில்லை..நிறைய வெள்ளிகள் கொடுத்து வாங்க வேண்டிய நிலை..குறுக்கு புத்தி..அபாரமாக யோசித்தது.. வங்கத்தில் ஓப்பியம் சாகுபடி செய்து ..தயாரான ஓப்பியத்தை சீனாவில் விற்பனை செய்தது.. சீனர்கள் விரைவில் போதைக்கு அடிமையாகி கிடந்ததை கண்ட சீன அரசு இதற்கு தடைவிதித்தது.. இருந்தாலும் கடத்தல் மூலமும்,:கள்ளச்சந்தைகள் மூலமும் அபாரமாக ஓப்பியம் சீனாவில் வழிந்தோடியது..இதற்காக சீனாவுக்கும் ஆங்கிலேயருக்கும் இடையில் இரண்டு போர்கள். முடிவில் சீனா பணிந்தது. 99 ஆண்டுகளுக்கு ஹாங்காங் 1898 ஆம் ஆண்டு பிரிட்டனின் காலனி பகுதியாக மாறியது.

போதையில் சீனர்கள்..

இந்திய ராணுவம் உருவாக்கம்:

ராணுவ ஆள் சேர்ப்பு விளம்பரம்..

1707 ல் ஔரங்கசீப் மரணத்திற்கு பிறகு பலமற்ற வாரிசுகளால் முகலாய பேரரசு சிதறுண்டது. அதே வேளையில் 1739 ல் நாதிர்ஷா படையெடுத்து..டில்லி வரை நுழைந்து கொலை கொள்ளை என ரத்தத்தை ருசித்து விட்டு, 50 கோடி மதிப்புள்ள தங்கம், வெள்ளி ,வைரங்கள், புகழ் பெற்ற மயிலாசனம் என கவர்ந்து சென்ற போது..டில்லியில் ஐம்பதாயிரம் பிணங்கள் மட்டுமே எஞ்சியிருந்தன. மற்ற இடங்களில் சிறு சிறு சிற்றரசுகள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையின்மை போரில் ஈடுபட்ட நேரம் அது. சிலர் தங்களது ஆட்சியை தக்க வைக்க ஆங்கிலேயரது ஆதரவை நாட, முதலில் உதவி, பின் அனைத்தையும் உருவி, கோரமண்டல் கடற்கரை முழுவதையும் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தனர். ( சோழ மண்டல கடற்கரை தான் வாயில் நுழையாமல் கோரமண்டல் ஆனது) கிழக்கத்திய கம்பெனி விரிவடைய ஆரம்பிக்க, அதுவரை அரசர்களின் ராணுவத்தில் இருந்தவர்கள் வேலை இழக்க, அவர்கள் படிப்படியாக பிரிட்டிஷ் ராணுவத்தில் சேர்க்கப்பட்டனர். 1756..வங்க நவாப் சிராஜ் உத் தௌலா. ஜவுளி வர்த்தகம் மற்றும் கப்பல் கட்டுமானத்தின் மையமாக விளங்கிய பகுதி இது. ஏற்றுமதி மூலம் இங்குள்ள மக்கள் பெரும் செல்வந்தர்களாக வளைய வந்தனர்.. ஆங்கிலேயர்கள் வங்கத்தில் வில்லியம் கோட்டை என்ற அரணை உருவாக்கி வர்த்தக ஸ்தலமாக பயன்படுத்திக் கொண்டிருந்தார்கள். பாதுகாப்புக்கு ராணுவம். இவர்களது மறுபக்கம் தெரிந்த நவாப் இவர்களை எச்சரிக்கை செய்திருந்தார். ஆனால் நாளாக நாளாக ராணுவத்தில் நவாபின் எச்சரிக்கை யை மீறி துருப்புகளின் எண்ணிக்கை அதிகரிக்க ஆரம்பிக்கவே .. நவாப் வில்லியம் கோட்டை மீது போர் தொடுத்து, அங்கிருந்த வெள்ளையர்கள் சிலரை சிறைப்பிடித்து, வில்லியம் கோட்டையின் பாதாளச் சிறையில் அடைத்து வைக்க.. மூச்சு திணறி அடைக்கப்பட்ட 146 பேரில் வெறும் 23 பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர்..

பிளாசி யுத்தம்:

இதைத் தொடர்ந்து நவாபை ஒழித்து கட்ட திட்டம் தீட்டப்பட்டது. நவாபின் தளபதி மீர்ஜாபரிடம் தங்களுக்கு உதவினால்.. வங்கத்தின் அடுத்த நவாப் நீ தான் என்று உத்திரவாதம் அளித்தனர். மிகச்சிறந்த ராஜதந்திரி ராபர்ட் கிளைவ் தலைமையில் நவாபுக்கு எதிரான யுத்தம் ஆரம்பிக்க, முர்ஜாபர் தலைமையில் இயங்கிய சுமார் ஐம்பதாயிரம் வீரர்களோடு யுத்த களத்திற்கு செல்லாமல் நம்பிக்கை துரோகம் செய்து விட .. பிளாசி என்ற இடத்தில் நடந்த யுத்தம் ஆங்கிலேயருக்கு சாதகமாக அமைந்தது..மீர்ஜாபர் பொம்மை நவாப் ஆக மாற்றப்பட்டு, செல்வத்தை அள்ளித்தந்த அமுதசுரபியான வங்கத்தின் வரிவசூல் செய்யும் உரிமையை ஆங்கிலேயர் பெற்றதோடு, அங்குள்ள கஜானாவில் அடித்த கொள்ளை மட்டுமே சுமார் 20 லட்சம் பவுண்ட்டுகள். இப்போரின் முடிவில் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனி இந்தியாவில் பலமாக தனது கால்களை ஊன்றியது.

1765ல் இரண்டாம் ஆலம் ஷா தோற்கடிக்கப்பட்டு, வங்கம், பீகார், ஒரிசா பகுதிகளின் வரிவசூல் செய்யும் உரிமையைப் பெற்றனர்.. மன்னருக்கு வெறும் ஓய்வூதியம் மட்டும்..

வெள்ளையர்களா? கொள்ளையர்களா?:

பட்டு ஏற்றுமதியில் கோலோச்சிய வங்கம் இதன் பிறகு சின்னாபின்னமாக்கப்பட்டது. கடற்கரையோரங்களில் பல ஜவுளித் தொழிற்சாலைகளை நிறுவினர். இந்தியாவின் தரமிக்க விலை மலிவான ஜவுளிகளுடன்.. ஆங்கிலேயர்கள் தங்கள் தொழிற்சாலைகளில் இருந்து தயாரித்த ஆடைகள் போட்டிபோட இயலாத நிலையில். இந்தியாவின் ஜவுளி ஏற்றுமதிக்கு 70 முதல் 80 விழுக்காடு வரை வரி வசூலிக்கப்பட்டது.. நெசவாலைகளில் கைத்தறிகள் அடித்து நொறுக்கப்பட்டன.. அதோடு அவர்கள் கைவிரல்களும் தறிகளை தொடாதவாறு முறிக்கப்பட்டன..

திப்பு என்ற புலி:

பிரான்சின் ராணுவம் மற்றும் தொழில் நுட்ப உதவியுடன் ஆங்கிலேயர்களை தீவிரமாக எதிர்த்துக் கொண்டிருந்த திப்பு சுல்தானுக்கு உதவாமல், மராட்டியர்கள் ஆங்கிலேயர்களுடன் சேர்ந்து கொண்டு அவரை தோற்கடித்த கொடுமையும் நிகழ்ந்தது. 1799 ல் திப்பு இறந்த செய்தி கேட்டு வெல்லெஸ்லி தனது மது கோப்பையை உயர்த்தி ” இன்று நான் இந்தியாவின் சடலத்தின் மீது கொண்டாடுகிறேன்.”

பிரிட்டனின் தொழிற்சாலைகளுக்கு தேவையான பருத்தி இங்கிருந்து கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து ஆடைகள் மலை போல் குவிய ஆரம்பித்தன. துறைமுகங்களுக்கு சுலபமாக பொருட்களை எடுத்துச் செல்ல பாலங்கள், சாலைகள், தொடர் வண்டி பாதைகளை ஏற்படுத்தினர்..அதிக வரி செலுத்தி தங்கள் ஜவுளிகளை அனுப்ப இயலாத நிலை. ஆனால் அங்கிருந்து வரும் பொருட்களுக்கு இந்தியர்களால் வரி போட இயலவில்லை.. ஏனெனில் அனைத்து துறைமுகங்களும் ஆங்கிலேயர் கட்டுப்பாட்டில். வரி செலுத்திய பிறகு தான் ஏற்றுமதி பொருட்களை அனுப்ப இயலும். விரைவில் ஜவுளித் தொழில் நசுங்க ஆரம்பிக்க, வறுமை நிலைக்கு தள்ளப்பட்ட மக்கள் தங்கள் நிலங்களை விட்டு விட்டு வெளியேற ஆரம்பித்தனர். விளைச்சலில் பாதி வரி.. விளைந்தாலும் இல்லையென்றாலும் வரி கொடுத்தே ஆகவேண்டும்.. அறுப்பதற்கு முன் வரி. கொடுக்க இயலாதவர்கள் கடுமையாக தண்டிக்கப்பட்டு அவர்கள் நிலங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

வேளாண் நிலங்கள் அனைத்திலும் பருத்தி மற்றும் இன்டிகோ பயிர் செய்ய கட்டாயப்படுத்தப்பட்டனர். .உலக வர்த்தகத்தில் 25% ஆக இருந்த இந்தியாவின் ஏற்றுமதி முற்றிலுமாக சிதைந்து மறைந்தது.. அங்கே வாழ்ந்த சுமார் மூன்று கோடி மக்களின் ரத்தம் உறிஞ்சப்பட்டது. 1765 முதல் 1825 வரை மட்டும் ஆண்டுக்கு சுமார் 1,80,00,000 பவுண்டுகள் இங்கிலாந்துக்கு சென்று கொண்டிருந்தது..( இந்திய மதிப்பில் சுமார் 100 ஆல் பெருக்கி கொள்ளவும்.. ஆனால் இது அன்றைய மதிப்பு)

காலடியில் வீழ்ந்து கிடந்த ஆங்கிலேயர்களின் கீழ் அவர்களுக்கு அடிமைகளாக பணிபுரிய வேண்டிய நிலையில் அது வரை அதிகாரிகளாக வாழ்ந்தவர்கள் வந்திருந்தனர்.

” காலைக்கடன் முடித்து விட்டு கால் கழுவத்தெரியாத சொற்ப பிரிட்டிஷ் வர்த்தகர்களின் உத்தரவுக்கு கீழ் படியும் நிலை வந்தபிறகு எங்களுக்கு கௌரவம் எங்கே மிஞ்சியிருக்கும்?” ‌ முகலாய அரசு அதிகாரி நாராயண் சிங்.. இவ்வாறு பிரிட்டிஷ் வயலாற்றாசிரியரிடம் கூறினார்.

கிழக்கத்திய கம்பெனியில் முதலீடு செய்திருந்தவர்கள் அனைவரும் செல்வத்தில் திளைத்தனர்.. சிற்றரசுகளிடமும், செல்வந்தர்களிடமும் கொள்ளையடிக்கப்பட்ட வை லண்டனில் மாட மாளிகைகள் ஆகவும், பண்ணைகள் ஆகவும் , தொழிற்சாலைகளாகவும் மாறியதோடு, அவர்கள் பிரிட்டனின் பாராளுமன்றத்திலும் பெரும் தொகை செலுத்தி உறுப்பினராகவும் முடிந்தது.

இந்தியர்களை சுரண்டிய பணத்தில்…

1768 முதல் 1770 வரை வங்கம், பீகார், ஒரிஸ்ஸா போன்ற பகுதிகளில் மிகப் பெரும் பஞ்சம் ஏற்பட்டது..அது வரை ஆண்ட மன்னர்கள் இது போன்ற காலத்தில்.. மக்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கி வந்தனர்.. ஆனால் பிரிட்டிஷ் கிழக்கிந்திய கம்பெனியோ தனது வருமானத்தை மட்டுமே கருத்தில் கொண்டு.. எந்தவொரு நிவாரணமும் வழங்காததோடு,வரிவசூலிப்பதிலும் தங்களுக்கான வருமானத்தை பெருக்குவதிலும், குறியாக இருந்தனர். உணவு ஏதுமின்றி பசி பட்டினியால் அப்பகுதியில் சுமார் பத்து லட்சம் மக்கள் உயிரிழந்தனர். இது வங்க மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்காகும்.

மலைகளில் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பிடுங்கப்பட்டு தேயிலை தோட்டங்கள் உருவாகின. தேயிலை ஏற்றுமதியில் மிகப் பெரிய லாபத்தை இந்நிறுவனம் ஈட்டியது.

சிறு சிறு சிற்றரசுகளோடு போர், சதி, துரோகம் என பல்வேறு வழிகளில், தேசம் முழுவதையும் தன் கட்டுப்பாட்டில் கொண்டு வர..1857ம் ஆண்டு முதல் சுதந்திர போர் என்று நாமும், இகழ்ச்சி யாக சிப்பாய் கலகம் என்று ஆங்கிலேயர்களும் வர்ணித்த ஆங்கில ஆதிக்கத்திற்கு எதிராக சரியாக திட்டமிடப்படாத புரட்சி வெடிக்க, ..எங்கே தங்களின் காமதேனு கைகளை விளையாட்டு போய் விடுமோ என்று பயந்த இங்கிலாந்து, பிரிட்டிஷ் கிழக்கிந்திய நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் இருந்த இந்திய பகுதிகளை 1858 நவம்பர் 1ம் நாள் இங்கிலாந்து ராணியின் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.. எஞ்சியவை களவாடப்பட காலம் நகர்ந்து வழிவிட்டது.

இவ்வாறு நெசவுத் தொழில், விவசாயம், கலாச்சாரம், பொருளாதாரம் என அனைத்தும் நசுக்கப்பட்டும்..மிச்சமிருந்த ஒன்று இந்து முஸ்லீம் ஒற்றுமை.. அதையும் பின் வந்த பிரிட்டிஷ் அரசு முடித்து வைத்தது.

Related: independence day speech in tamil