காப்பி அல்லது குழம்பி (இலங்கைத் தமிழ்: கோப்பி) (en:Coffee(காஃபி)) என்பது பலரும் விரும்பி அருந்தும் ஒரு நீர்ம உணவு (பானம்).
காப்பி என்னும் செடியில் விளையும் சிவப்பு நிற காப்பிப் பழத்தின் கொட்டையை பக்குவமாய் வறுத்து, பிறகு அரைத்துப் பொடி செய்து அதன் வடிநீராக பாலுடன் சேர்த்தோ அல்லது சேர்க்காமலோ பெரும்பாலும் சூடாக அருந்தும் நீர்ம உணவு காப்பி ஆகும்.
இந்தியாவில் பலரும் பாலுடனும் சிறிது சர்க்கரை (சீனி) சேர்த்துக் குடிப்பார்கள். மேற்கு நாடுகளில் பால் இல்லாமலும், சர்க்கரை இல்லாமலும் கசப்பான கரும் காப்பியாகக் குடிக்கிறார்கள்.
சர்க்கரை சேர்த்துக் குடித்தாலும் காப்பி சற்று கசப்பான நீர்ம உணவுதான் (பானம்தான்). ஒரு குவளை (தம்ளர்) (200 மில்லி லிட்டர்) காப்பி குடித்தாலே அதில் 80-140 மில்லி கிராம் வரை காஃவீன் என்னும் போதைப் பொருள் இருக்கும் .
இந்த காஃவீன் என்னும் போதைப் பொருள் இருப்பதால் காப்பி குடிப்பவர்கள் ஒருவகையான பழக்க அடிமைத்தனத்திற்கு உள்ளாகிறார்கள் .
உலகிலேயே அதிகமாக விற்று-வாங்கக்கூடிய, நிலத்தின் விளைபொருளாக உள்ளவற்றுள், பெட்ரோலியத்திற்கு அடுத்ததாக உள்ள இரண்டாவது பொருள் காப்பிதான். மொத்தமாக கடைவிலை மதிப்பில் (retail value) ஆண்டுக்கு 70 பில்லியன் ஐக்கிய அமெரிக்க நாடுகள் டாலர் ஆகும்.
காப்பி, உலகில் 50 க்கும் அதிகமான நாடுகளில் சற்றேறக்குறைய 10 மில்லியன் ஹெக்டேர்களில் பயிரிடப்படுகின்றது. இன்று ஏறத்தாழ 100 மில்லியன் மக்களின் வாழ்க்கை ஊதியம் காப்பிப் பயிரை ஒட்டி நடக்கின்றது.
காப்பிச் செடியின் பேரினத்தில் 100 க்கும் அதிகமான இன வகைகள் உள்ளன. ஆனால் அவற்றுள் இரண்டே இரண்டு இனங்கள் மட்டுமே பயிரிடப்பட்டு, நீர்ம உணவுக்குப் பயன் படும் காப்பியாக உள்ளன.
இவ்விரு இனங்களின் அறிவியல் வகைப்பாட்டுப் பெயர்கள் காப்பியா அராபிக்கா (Coffea arabica), காப்பியா கன்னெஃவோரா (Coffea canephora) (காப்பியா ரொபஸ்ட்டா (Coffea robusta) என்றும் இதற்கு மற்றொரு பெயர் உண்டு). காப்பிச் செடிப் பேரினம் ருபியாசியே (Rubiaceae) என்னும் குடும்பத்தைச் சேர்ந்தது. இக்குடும்பத்தில் 600 பேரினங்களும் 13, 500 இனச்செடிவகைகளும் உள்ளன.