ஈரானில் வாழும் மானுடர்களுக்கு ஈரம் இருக்கிறதா…?
ஈரான் நாடு:
ஈரான் நாடு நமது ஆசிய கண்டத்தின் மேற்கே உள்ள ஒரு இஸ்லாமிய குடியரசு நாடாம். இதன் தலைநகரம் தெஹ்ரான். அன்றைய காலத்தில் இந்நாடு பாரசீகம் (பெர்சியா) என அழைக்கப்பட்டது. “ஈரான்” என்றால் ஆரியரின் நிலம். இப்பெயர் 1935ஆம் ஆண்டில் ஈரான் என்றானது.
“இஸ்லாமியத்தின் இன்னொரு பெயர் ஈரான்”
ஈரானின் நாகரீகம்:
புவியின் பழமையான நாகரீகம் கொண்டது இந்த ஈரான் நாடாகும். ஈரானின் முதலாவது வம்ச ஆட்சி கிமு 2800 ஆம் ஆண்டுக் காலப் பகுதியில், ஈலமிய இராச்சியக் காலத்தில் உருவாகியது. கிமு 625ல் “மெடே”க்கள் ஈரானை ஒன்றிணைத்தனர்.
இவர்களைத் தொடர்ந்து, ஈரானிய ஆக்கிமெடியப் பேரரசு, எலனிய செலூசியப் பேரரசு, பார்த்தியப் பேரரசு, சசானியப் பேரரசு என்பன இப்பகுதியில் உருவாகின. கிபி 651ல் முஸ்லிம்கள் இப்பகுதியைக் கைப்பற்றினர்.
ஈரானியப் பின்-இஸ்லாமிய வம்சங்களும், பேரரசுகளும், பாரசீக மொழியையும், பண்பாட்டையும் ஈரானியச் சமவெளி முழுவதும் விரிவடையச் செய்தன. ஈரானியரின் சுதந்திரத்தை மீளவும் நிலைநாட்டிய தொடக்ககால வம்சங்களுள் தகிரியர், சபாரியர், சமானியர், புயியர் போன்றோர் அடங்குகின்றனர்.
ஈரானின் விதிமுறைகள்:
ஈரானில் ஆண்களை விட பெண்களுக்கே அதிக கட்டுபாடும் கண்டனங்களும் நிலவி வருகிறது இன்றுவரை. ஈரானிய பெண்களை பொறுத்தவரை அவர்களுக்கான மிகப் பெரிய ஒரு கட்டுப்பாடு என்பது எங்கு சென்றாலும் ஹிஜாப் அணிய வேண்டும் என்பதுதான். பெரும்பாலான இஸ்லாமியர்கள் ஹிஜாப் அணியும் வழக்கம் கொண்டுள்ளனர். ஆனால் எல்லா நாடுகளிலுமே பெண்கள் ஹிஜாப் அணிவது கட்டாயம் இல்லை. ஹிஜாப்பிற்கு உள்ளே அணியும் ஆடைகள் தளர்வாக இருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் தலை முதல் கால் வரை அவர்கள் முழுவதுமாக ஆடைகளை அணிந்திருக்க வேண்டும்.
இந்த கட்டுப்பாடுகளை ஏதேனும் ஒரு பெண் மீறியதாக சந்தேகிக்கப்பட்டால் அந்தப் பெண்ணை அடிப்பதற்கு காவல்துறைக்கு உரிமை இருக்கிறது, மற்றும் ஆறு மாதங்களுக்கு சிறை தண்டனையும் விதிக்கலாம். ஈரானிய சட்டத்தின்படி தந்தை, தான் தத்து எடுத்த மகளை திருமணம் செய்து கொள்ள அனுமதி இருக்கிறது. 2014 ஆம் ஆண்டு இந்த சட்டம் மற்றும் பழக்கம் தடை செய்யப்பட்டாலும், அதன் பிறகு பாதுகாவலரின் அமைப்பு மற்றும் மதத் தலைவர் அதனை ரத்து செய்து செய்தனர். தத்தெடுக்கப்பட்ட பெண்ணை ஈரானிய தந்தை திருமணம் செய்து கொள்ளலாம் என்று கூறியுள்ளனர். தற்போதுகூட நீதிமன்றத்திடமிருந்து இதற்கான அனுமதி பெற்று திருமணம் நடைபெற்று வருகிறது என்பது வருத்தப்படக் கூடியதாக இருக்கிறது.
“ஒரு பெண்ணின் ஆடையைக் குறை சொல்வாராம்,
ஆனால், தந்தை தத்து பிள்ளையைத் தாரமாக்கி கொள்ளலாமாம்”
“சட்டமே குற்றமில்லா சமூகத்தை நிலவத்தான்”
ஆண் என்ற ஆணவத்தில் ஆடிய ஒரு ஆணவனின் ஆடையில் குறை காணாது, பெண்ணவளின் மேனியை ஒரு மேசையை அடிப்பது போல் அடிக்கும் சட்டம் சட்டமா..?
“ஆடை அவள் ஆசை” என்பது ஈரானிற்கு – ஈரான் நாட்டு பெண்களுக்கு ஒரு கனவாகும்.
ஈரானின் போராட்டம்:
சில மாதங்களுக்கு நமது இந்தியாவில் ஒரு ஹிஜாப் தகராறு நிகழ்ந்தது. தற்போது அதே போல இன்று ஈரானில் நடந்து வருகிறது.
இதன் முதல் காரணம் “ஹிஜாப் மற்றும் ஈரானின் கலாச்சாரக் காவல் பிரிவு”.
ஈரானில் ஷியா முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வசிக்கின்றனர். அந்த நாட்டில் 9 வயதுக்கு மேற்பட்ட சிறுமிகள் ஹிஜாப் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பெண்கள் ஆடை அணியும் விதத்தை கண்காணிக்க ‘காஸ்த் எர்ஷாத்’ என்ற சிறப்பு பிரிவு போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் நாடு முழுவதும் பொது இடங்களில் சோதனை நடத்தி ஹிஜாப் அணியாத பெண்கள், முஸ்லிம் முறைப்படி ஆடை அணியாத பெண்களை கைது செய்து வருகின்றனர். கைது செய்யப்பட்டவர்களுக்கு ஒழுக்க நெறி பாடங்கள் கற்பிக்கப்படும்.
இந்நிலையில், ஈரானின் மேற்கில் அமைந்துள்ள குர்திஸ்தான் மாகாணம், சஹிஸ் நகரை சேர்ந்த மாஷா அமினி என்ற 22 வயது பெண் கடந்த 13-ம் தேதி தலைநகர் தெஹ்ரானில் உள்ள உறவினரை சந்திக்க குடும்பத்துடன் சென்றார். அப்போது சிறப்பு படை போலீஸார், மாஷா அமினியை வழிமறித்தனர். அவர் முறையாக ஹிஜாப் அணியவில்லை என்று குற்றம் சாட்டி கைதுசெய்தனர். போலீஸ் காவலில் அவர் மிகக் கொடூரமாக தாக்கப்பட்டார்.
இதில் கோமா நிலைக்கு சென்ற அவர் மருத்துவமனையில் கடந்த 16-ம் தேதி உயிரிழந்தார்.
குரானில் பெண்களுக்கான சொற்கள் பல ஆணாதிக்கத்தின் ஆணிவேரகிறது.
ஆணுக்கு கட்டுப்பட்டு நடப்பவளே நல்லொழுக்கமுடையவள். கணவனை மதிக்காத மனைவியை படுக்கையை விட்டு விலக்கி, அடித்து கட்டுப்படுத்தலாம் குரான் 4:34
குடும்பத்தில் பிரிவு ஏற்பட்டால் குழந்தைகள் மீது மனைவிக்கு எந்த உரிமையும் இல்லை. பால் கொடுத்தால் கூட அதற்கு விலை கொடுக்க வேண்டும். குரான் 2:233
மாஷா அமினியின் மரணம் ஈரானில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தெஹ்ரான், குர்திஸ்தான் மாகாணம் ஆகிய நாடுகளில் பெண்கள் சாலைகளில் திரண்டு ஹிஜாபுக்கு எதிராக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். கெர்மன்ஷா மற்றும் ஹமேடன் ஆகிய பகுதிகளில் போராட்டங்கள் தீவிரம் அடைந்து வருகிறது.
ஈரானில் ஹிஜாபிற்கு எதிரான போராட்டத்தை அங்குள்ள பெண்கள் தீவிரமாக நடத்தி வரும் நிலையில், அந்நாட்டு ராணுவம் போராட்டத்தை ஒடுக்க கொடூரமான மற்றும் மூர்க்கத்தனமாக நடவடிக்கைகளில் இறங்கியுள்ளது.
ஈரான் நாட்டில் கடுமையான ஷரியா சட்டங்கள் பின்பற்றப்பட்டு வருகிறது. இதிலுள்ள பல்வேறு சட்டங்கள் பெண்களின் உரிமைகளைப் பறிக்கும் வகையில் இருப்பதாகச் சர்வதேச மனித உரிமை ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர்.
இந்த போராட்டத்தில் ராணுவம் குறிப்பாக பெண்களை குறி வைத்து அவர்களின் மார்பகம் கண்கள் மற்றும் பெண் உறுப்பு ஆகிய இடங்களில் தாக்குவதாக மருத்துவர்கள் தெரிவிகின்றனர்.
“கடவுளோ! மனிதனோ! பெண்ணை என்றும் பொம்மை ஆக்க இயலாது”