பொன்னியின் செல்வனுடைய இரண்டாவது பாகத்தை நாம் காண இருக்கிறோம். பொன்னியின் செல்வனால் ஈர்க்கப்பட்டு, அதில் மூழ்கிப் போன நேயர்கள் அனைவருக்கும் இனிதான வணக்கம்!
கதைச் சுருக்கம்
பொன்னியின் செல்வன் புத்தகத்தின், இரண்டாம் பாகத்தின் பெயர் “சுழற்காற்று”. இதில் மொத்தம் 53 அத்தியாயங்கள் உள்ளன. இளவரசி குந்தவை பிராட்டி, பொன்னியின் செல்வருக்குக் கொடுத்த ஓலையை எடுத்துக் கொண்டு இலங்கைக்கு வருகிறான், வந்தியத்தேவன். கோடிக்கரையில் பூங்குழலியைச் சந்தித்து, அவள் உதவியுடன் இலங்கை செல்கிறான்.
சோழ நாட்டின் முதன் மந்திரி அனிருத்த பிரம்மராயர், ஆழ்வார்க்கடியான் மூலம் ஒரு செய்தி அனுப்புகிறார். இப்போதைக்கு நிலைமை சரியில்லை; இளவரசர் எங்கும் போகாமல், இலங்கையிலேயே இருக்க வேண்டும் என்று சொல்லி அனுப்புகிறார், முதன் மந்திரி.
வெகு காலம் பழையாறையிலேயே இருந்த, குந்தவை தேவி தஞ்சை மாநகருக்கு வருகிறார். அங்கு நடக்கும் சதிகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும், என்று எண்ணி அவருடைய செயல்பாடுகள் அனைத்துமே இருக்கின்றன. நந்தினிக்கும், குந்தவைக்கும் சொற்போர் நடந்து கொண்டிருக்கிறது. இந்நிலையில் நந்தினி, இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு; வந்தியத்தேவனின் நண்பன் கந்தன் மாறன் மூலம் ஒரு ஓலை கொடுத்து, காஞ்சிபுரத்திற்கு அனுப்புகிறாள்.
“இளவரசர் ஆதித்த கரிகாலர் தங்களை காஞ்சிக்கு வரும்படி அழைத்திருக்கிறார்” என்று பார்த்திபேந்திர பல்லவன், பொன்னியின் செல்வருக்கு ஓலை கொண்டு வந்திருக்கிறான்.
பூங்குழலி மூலம் சேனாதிபதிக்கு ஒரு செய்தி கிடைக்கிறது. “சுந்தர சோழ சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில், பழுவேட்டரையர்கள் இளவரசரை கைது செய்து அழைத்து வர ஆள் அனுப்பியிருக்கிறார்கள்” என்ற செய்தி கிடைக்கிறது.
இந்த நான்கு செய்திகளுக்கு மத்தியில் இளவரசர், சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் தஞ்சைக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கிறார். அதன் பிறகு அவருக்கு நேரக்கூடிய சில சிக்கல்கள் என்னவென்பதே இந்த பாகத்தின் கதை. இடையில் வந்தியத் தேவன் ஒரு பிரச்சனையில் சிக்கிக் கொள்கிறான். அவனை இளவரசர் சென்று காப்பாற்றி அழைத்து வருவதும் தான் இந்த பாகத்தின் முழுக் கதை.
பொன்னியின் செல்வர், இளவரசர் அருள் மொழி வர்மரை சந்தித்து, அவருடைய குண நலன்களை அறிந்து கொண்டு; அவரோடு நாம் என்றும் பிரியாத ஒரு மன நிலையில் இளவரசரோடு இணைவோம். இந்த பாகத்தில் இளவரசரோடு இணை பிரியாது பயணம் செய்வோம் வாருங்கள்…..
கதை
அந்த ஒரு அழகான மாலை நேரத்தில், கோடிக்கரையில் கடல் அலைகள் ஓய்ந்திருந்தன. கடற்கரையின் அழகே அழகு தான்! அங்கு சிறிய படகில் ஒய்யாரமாக சாய்ந்து கொண்டு பாட்டுப் பாடிக் கொண்டு வந்தாள் பூங்குழலி. படகு கரை வந்து சேர்ந்த பின்பு, படகிலிருந்து இறங்கி இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தாள், பூங்குழலி.
அப்போது, இரண்டு குதிரைகளின் மேல் இரண்டு பேர் பயணம் செய்து வந்தனர். அதில் ஒருவன் நமது வீரன் வந்தியத்தேவன். இன்னொருவன் வைத்தியரின் மகன். குதிரையிலிருந்து இறங்கியதும் பூங்குழலியை விரட்டிக் கொண்டு ஓடி வந்தான், வந்தியத்தேவன். பூங்குழலியும் அவனைக் கண்டு விரைவாக ஓடினாள். ஏன் ஓடுகிறோம் என்று மட்டும், இருவருக்குமே தெரியவில்லை. ஓடும் போது ஒரு சேற்றுக் குழியில் நம் வீரன் சிக்கிக் கொண்டான். பூங்குழலி தான் அவனைக் காப்பாற்றினாள்.
பூங்குழலியிடம் பேச்சுக் கொடுக்கும் வாக்கில்; சேந்தன் அமுதனைப் பற்றி விசாரித்தான், வந்தியத் தேவன். சேந்தன் அமுதன் உன் காதலன் என்று சொன்னானே! அது உண்மையா? என்று கேட்டான். அது சுத்த பொய் என்று கூறிவிட்டாள், பூங்குழலி.
அப்படி என்றால், அந்த ஸ்தானத்துக்கு நான் விண்ணப்பம் போடலாம் என்று பார்க்கிறேன்; என்று தன் காதல் வலையை பூக்குழலியை நோக்கி வீசினான், நம் வீரன். ஆனால், அவள் அதற்கு சிக்கவில்லை.
கோடிக்கரையில் இருந்து இலங்கைக்கு செல்ல வேண்டுமென்றால், கண்டிப்பாக பூங்குழலியின் உதவி தேவை என்பதை உணர்ந்தான், வந்தியத்தேவன். எப்படியாவது அவளிடம் உதவி கேட்டு, படகு தள்ளி கொண்டு இலங்கை வருவதற்கு சம்மதம் பெற வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டான். ஆரம்பத்தில் பூங்குழலி அதற்கு பிடி கொடுக்கவில்லை. வரவே முடியாது என்று மறுத்துவிட்டாள்.
தானும், வைத்தியரின் மகனும் சக்கரவர்த்தி சுந்தர சோழருக்காக மூலிகை பறித்துக் கொண்டு செல்வதற்காக தான்; இலங்கைக்குச் செல்கிறோம் என்று பூங்குழலியிடம் சொன்னான், வந்தியத்தேவன். ஆனால், அதில் உண்மை இல்லை என்பதை கண்டுபிடித்து விட்டாள், பூங்குழலி. பொன்னியின் செல்வர், இளவரசர், அருள்மொழி வர்மருக்குத் தான், ஓலை கொண்டு செல்கிறான் என்பதை கண்டுபிடித்தாள். பிறகு தான், இலங்கை செல்ல சம்மதித்தாள். அதை அறிந்து வந்தியத்தேவன் மிகவும் ஆனந்தசிக்கவில்ல
கோடிக்கரைக்கும், நம் வந்தியத்தேவனைத் தேடிக் கொண்டு பழுவேட்டரையர்களின் ஆட்கள் வந்துவிட்டனர். அவர்களிடம் இருந்து அவனை சாமர்த்தியமாகக் காப்பாற்றினாள், பூங்குழலி. அதை அறிந்து பூங்குழலிக்கு மனமார நன்றி கூறினான், நம் வீரன்.
அவள் சொன்னபடியே அன்று இரவு படகேறி இலங்கைக்கு புறப்பட்டனர் பூங்குழலியும், வந்தியத்தேவனும். அப்போது பல விஷயங்களைப் பற்றி இருவரும் உரையாடிக் கொண்டே சென்றனர். இளவரசர் அருள்மொழி வர்மருக்கு; பொன்னியின் செல்வர் என்ற பெயர் இருப்பது போல்; தன்னுடைய இன்னொரு பெயர், சமுத்திரகுமாரி என்று கூறினாள், பூங்குழலி.
அவள் சொல்லியதை எல்லாம் ஒவ்வொன்றாக கேட்டுக் கொண்டே இருந்தான், வந்தியத்தேவன். அவன் வாயும் அமைதியாக இருக்கவில்லை. ஏதோ ஒன்றை பேசிக் கொண்டே தான் இருந்தான், வல்லவரையன்.
வந்தியத்தேவனின் மனதில் திடீரென்று பூங்குழலி மீது ஒரு சந்தேகம் உண்டாயிற்று. திடீரென்று கடலில் குதித்து விட்டான். சரியாக நீச்சல் தெரியாததால், தண்ணீரில் மூழ்கி உயிருக்கு போராடினான், வந்தியத்தேவன். அவனை மிகவும் சிரமப்பட்டு ஒற்றை ஆளாக தண்ணீரில் குதித்து காப்பாற்றி படகில் ஏற்றினாள், பூங்குழலி. பிறகு தான் தன்னுடைய தவறை உணர்ந்தான், வந்தியத்தேவன்.
என்னை இலங்கைக்கு அழைத்துப் போக உதவியதற்காக; ஏதாவது மறு உதவி உனக்கு செய்ய வேண்டும். எந்த உதவியானாலும் கேள் என்றான், வந்தியத்தேவன். நேரம் வரும்போது கேட்டுக்கொள்கிறேன் என்றாள், பூங்குழலி.
பொழுது விடிந்ததும் இருவரும் இலங்கையை நெருங்கிவிட்டனர். நாகத்தீவு என்ற ஒரு தீவில் படகை நிறுத்தினாள், பூங்குழலி. இங்கிருந்து மாதோட்டத்திற்கு சென்று விடு. அங்கு சென்றால் இளவரசர் அருள்மொழி வர்மரை சந்திக்கலாம் என்று கூறி அவனை அனுப்பி வைத்தாள்.
உனக்கு நான் என்ன மறு உதவி செய்ய வேண்டும் என்று கேட்டான், வந்தியத்தேவன். இளவரசரை சந்திக்கும் பொழுது சமுத்திரகுமாரியை உங்களுக்கு ஞாபகம் இருக்கிறதா? என்று கேள். அதுதான், நீ எனக்கு செய்யும் உதவி என்றாள்.
வந்தியத்தேவன் நாகத்தீவில் இறங்கி மாதோட்டம் நோக்கி போய்க் கொண்டு இருந்த அதே சமயத்தில்; சோழ சாம்ராஜ்யத்தின் முதன் மந்திரி, அனிருத்த பிரம்மராயரும், நம் ஆழ்வார்க்கடியான் நம்பியும் சாம்ராஜ்ய நிலையைப் பற்றி விவாதித்துக் கொண்டிருந்தனர்.
அதே நேரத்தில் பழையாறை நகரத்திலிருந்து இளவரசி, குந்தவை தேவியும்; கொடும்பாளூர் இளவரசி, வானதியும் தஞ்சைக் கோட்டையை நோக்கி சென்று கொண்டிருந்தனர். சோழ சாம்ராஜ்யத்திற்கே ஆபத்து நேரும் இந்த தருணத்தில் தான் மட்டும் எதையும் கண்டு கொள்ளாமல், பழையாறை நகரிலேயே இருப்பது சரியல்ல; என்பதை உணர்ந்த குந்தவை பிராட்டி, தஞ்சாவூருக்கு புறப்பட்டு செல்கிறாள்.
இந்த நேரத்தில் குந்தவையிடம், வானதி ஒரு கேள்வியை முன்வைக்கிறாள். இளவரசர் அருள் மொழி வர்மரை, எல்லோரும் பொன்னியின் செல்வர்; என்று அழைக்கின்றனர். அதற்கான காரணம் என்ன அக்கா? என்று கேட்டாள், வானதி. குந்தவை அந்த செய்தியை சொல்லத் தொடங்கினாள்.
ஒருநாள் அரண்மனை படகில் சக்கரவர்த்தியும், ராணிகளும், குழந்தைகளும் காவேரியில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது குழந்தையாக இருந்த அருள்மொழி வர்மரைக் காணவில்லை. அவரை எல்லோரும் தேடினார்கள். ஆனால், குழந்தை கிடைக்கவில்லை. திடீரென்று ஒரு அற்புத காட்சி தென்பட்டது. படகுக்கு சிறிது தூரத்தில், வெள்ளத்திற்கு மத்தியில், ஒரு பெண் உருவம் இரண்டு கைகளை மட்டும் தூக்கி பிடித்துக் கொண்டு நின்றது. அந்தப் பெண்ணின் கரங்களில்; அருள்மொழி வர்மர் இருந்தார். குழந்தை கிடைத்த பிறகு தான் அனைவருக்கும் உயிர் போய் உயிர் வந்தது. அதன் பின் அந்த பெண்ணைக் காணவில்லை. காவேரித் தாய் தான், குழந்தையைக் காப்பாற்றிக் கொடுத்திருக்க வேண்டும் என்று அனைவரும் நம்பினோம். அதன் காரணமாகத் தான், இளவரசரை “பொன்னியின் செல்வன்” என்று அழைக்கிறோம், என்றாள், குந்தவை.
இந்த கதையை சொல்லிக் கொண்டிருந்த போதே குந்தவையும், வானதியும்; தஞ்சை கோட்டையை அடைந்தனர். அங்கு இளவரசியைக் காண மக்கள் கூட்டம் அலை மோதியது. குந்தவை தேவியை வரவேற்க கோட்டை வாசலுக்கு வந்தாள், நந்தினி.
குந்தவை யானையிலிருந்தும், நந்தினி பல்லக்கிலிருந்தும் இறங்கினார்கள். நந்தினி விரைந்து முன்னாள் சென்று, குந்தவையை வரவேற்றாள். அந்த வரவேற்பை குந்தவை, புன்னகையோடு ஏற்றுக் கொண்டாள். சோழ நாட்டின் அந்த இரு பேரழகிகளையும் அங்கே ஒருங்கே கண்ட மக்கள் கூட்டம் உற்சாகத்தில் திகைத்தது.
நந்தினி, பொன் வர்ண மேனியாள். குந்தவை, செந்தாமரை நிறத்தினாள். நந்தினியின் பொன்முகம்,பூரண சந்திரனை போன்றது. குந்தவையின் திருமுகம், சிற்பிகள் வடித்த சிலை போன்றது. நந்தினியின் கண்கள், இறகு விரித்த தேன் வண்டுகள். குந்தவையின் கண்கள், நீலோத்பலத்தின் இதழ்கள். நந்தினியின் இதழ்கள், அமுதம் ததும்பும் பவள செப்பை ஒத்தது. குந்தகையின் மெல்லிய இதழ்கள், மாதுளை மொட்டை ஒத்தது. நந்தினி, தன்னுடைய கூந்தலை கொண்டை போட்டு மலர்களால் அலங்கரித்து இருந்தாள். குந்தவையின் கூந்தலோ, “இவள் அழகின் அரசி” என்பதற்கு அடையாளமாக காட்சியளித்தது.
அன்று தஞ்சை கோட்டைக்குள் பேரழகிகளான குந்தவையும், நந்தினியும் சொல்லம்புகளைக் கொண்டும், விழிகளாகிற வேல்களைக் கொண்டும் பெரும் யுத்தம் நடத்திக் கொண்டு இருந்தார்கள். மற்றவர்களைப் பொறுத்தவரை அவர்கள் இருவரும் நெறுங்கிய தோழிகள்; என்றே காட்டிக் கொண்டார்கள்.
தஞ்சைக்கு குந்தவை தேவி வந்த நேரமோ, என்னமோ தெரியவில்லை; சுந்தரச் சோழரின் மனதில் பல காலமாக அடக்கி வைத்திருந்த ஒரு விசயம், இன்று அவர் மனதிலிருந்து வெளிப்பட்டு அவரை சற்று நிம்மதியடையச் செய்தது.
சுந்தர சோழர் வாலிபனாக இருக்கும் போது இலங்கை நாட்டுக்கு போருக்காகச் சென்றிருத்தார். ஆனால், போரில் தோல்வி அடைந்த காரணத்தினால், நாட்டிற்கு திரும்பி வர மனமில்லாமல், இடையில் யாருக்கும் தெரியாமல் ஒரு தீவில் தங்கிவிட்டார். அங்கு ஒரு ஊமைப் பெண்ணைக் கண்டார். அந்த பெண்ணுடன் காதல் வயப்பட்டார். சிறிது நாட்களில், காலத்தின் கட்டாயத்தின் பேரில்; சோழ சாம்ராஜ்யத்தின் பொறுப்பேற்க வேண்டிய நிலை அவருக்கு வந்தது. மன்னர் பட்டத்தை ஏற்றுக்கொண்டார், சுந்தரச் செய்தது
மன்னர் பதவி ஏற்ற பிறகு, அரண்மனையின் மேலிருந்து மக்களைச் சந்தித்தார். மக்கள் கூட்டத்தோடு அந்த ஊமைப் பெண்ணின் முகத்தையும், சுந்தர் சோழர் கண்டார். சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணை காணவில்லை. அவளை தேடி கோடிக்கரைக்கு வந்து விட்டார், மன்னர். ஆனால், அந்த பெண் தற்கொலை செய்து கொண்டு இறந்துவிட்டாள், என்ற செய்தியை அவர் கேள்விப்பட்டு மனமுடைந்து போனார்.
இப்போது, அன்று இறந்து போன பெண்ணின் ஆவி, தன் கண் முன் அடிக்கடி தோன்றி தன்னை பயமுறுத்துவதாக, மகள் குந்தவை தேவியிடம் சொல்லிக் கொண்டிருந்தார், சுந்தர சோழர்.
இந்த செய்திகளை எல்லாம் சக்கரவர்த்தி சுந்தர சோழர்; இதுநாள் வரை யாரிடமும் சொல்லவே இல்லை. இப்போது கூட மிகவும் தயங்கித் தயங்கி தான், இளவரசி குந்தவை பிராட்டியிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
இந்த சோழ சாம்ராஜ்யம் சாபத்துக்கு உரியது. அதனால், மன்னர் பதவியை ஆதித்த கரிகாலர் ஏற்க வேண்டாம், என்று விரும்பினார், சக்கரவர்த்தி. தம் அண்ணன் ஆதித்த கரிகாலன் தான் அடுத்த மன்னன் என்று நினைத்துக் கொண்டிருந்த குந்தவை தேவிக்கு; இந்த செய்தி நிச்சயம் மனம் பதற வைக்கும் அல்லவா? அவளால் எந்த பதிலும் சொல்ல முடியவில்லை. ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினாள்.
நம் வீரன் வந்தியத்தேவனின் தோழன் கந்தன் மாறனை, சில காலம் சந்திக்காமலே இருந்தோம் அல்லவா? இப்போது, அவனோடு சில நேரம் பயணம் செய்வோம் வாருங்கள்.
கந்தன் மாறன் முதுகில் குத்துப்பட்டதும், அவனை காப்பாற்றி சேந்தன் அமுதனின் வீட்டில் சேர்த்து விட்டு அங்கிருந்து சென்று விட்டான், வந்தியத்தேவன். அதன் பிறகு பழுவேட்டரையர்களின் ஆட்கள், கந்தன்மாறனைத் தஞ்சை கோட்டைக்கு கொண்டு வந்தனர். இப்போது, அவனது உடல்நிலை ஓரளவு தேறிவிட்டது. இதை, பழுவூர் இளையராணி நந்தினி மூலம் கேள்விப்பட்ட இளவரசி குந்தவை தேவி, கந்தன் மாறனைச் சந்திக்க வந்தாள்.
தொடர்புடயவை: ஆதித்த கரிக்காலனை கொன்றது யார் ?
குந்தவை தேவியிடம் பேசிக் கொண்டிருந்த கந்தன் மாறன்; “வந்தியத்தேவன் தான் தன்னை முதுகில் குத்தியதாக உறுதியாகச் சொன்னான். ஆனால், உண்மையில் அன்றைக்கு என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியாது. இருந்தாலும் தன் கற்பனையைச் சேர்த்து வந்தியத்தேவனையே குற்றவாளியாகக் காட்டினான். வந்தியத்தேவன் எனக்கு மிகவும் பெரிய சிநேகித துரோகம் செய்து விட்டான்” என்றான், கந்தன் மாறன்.
இது எதையும் குந்தவையால் நம்ப முடியவில்லை. வந்தியத்தேவன் இப்படி முதுகில் குத்தியிருப்பான் என்று சொன்னால் யாருமே நம்ப மாட்டார்கள் தான். அதனால், நம் வீரனை முழுமையாக நம்பினாள், குந்தவை.
இதற்கிடையில் ஒரு புதிய செய்தி அவர்களுக்கு கிடைத்தது. தப்பிச் சென்ற ஒற்றன் பிடிபட்டான் என்றும், அவனைப் பிடித்து தஞ்சைக்கு கொண்டு வருகிறார்கள் என்றும் செய்தி வந்தது. ஆனால், பிடிபட்டவன் வைத்தியரின் மகன் என்பதை அறிந்து குந்தவை மிகவும் சினமுற்றாள்.
சக்கரவர்த்தி சுந்தர சோழருக்கு மூலிகை மருந்து கொண்டு வர, நான் அனுப்பிய வைத்தியர் மகனைப் பிடித்து வர யார் உங்களுக்கு அதிகாரம் அளித்தது என்று சிறிய பழுவேட்டரையரிடம் சண்டையிட்டாள், குந்தவை தேவி. பிறகு வைத்தியரின் மகனை விடுதலை செய்ய ஒப்புக்கொண்டார், சிறிய பழுவேட்டரையர். அவனை விடுதலை செய்வதற்காக பாதாளச் சிறைக்குச் சென்ற குந்தவை தேவி; அங்கு சேந்தன் அமுதன் இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தாள். பிறகு அவனையும் அங்கிருந்து விடுதலை செய்தாள்.
நம் வீரனுடன் சென்றவன் பிடிபட்டு விட்டான். வந்தியத்தேவன் என்ன ஆனான். அவனுக்கு எதுவும் ஆபத்து நேர்ந்திருக்குமோ என்று எண்ணினாள், இளவரசி. அவனுடைய நிலையை குறித்து மிகவும் கவலையுற்று இருந்தாள். அந்தக் கவலை யாரோ ஒருவருக்கானது அல்ல என்பது மட்டும் உறுதி. இருந்தாலும் எந்த நிலையிலும் இளவரசி அதை வெளிக்காட்டிக் கொள்ளவே இல்லை. வானதியோ இளவரசர் அருள் மொழி வர்மரைப் பற்றிய கவலையில் ஆழ்ந்து போனாள். அவளுடைய காதல் அவளை வாட்டி வதைத்தது.
பழுவூர் இளையராணி நந்தினி, இளவரசர் ஆதித்த கரிகாலருக்கு ஒரு ஓலை எழுதினாள்.
“தங்களைச் சந்திக்க வேண்டும். அதற்காக, தாங்கள் கடம்பூர் சம்புவரையர் மாளிகைக்கு வர வேண்டும்.”
என்று எழுதி அந்த ஓலையை கந்தன் மாறனிடம் கொடுத்து காஞ்சிக்கு அனுப்பி வைத்தாள், நந்தினி. ஆதித்த கரிகாலரை விட்டு விட்டு, மதுராந்தகனை அரசனாக்க எல்லோரும் முயற்சி செய்து கொண்டிருக்கும் தருணத்தில், நந்தினியின் இந்த செயல் எதற்கென்று, கந்தன் மாறனுக்கு புரியவில்லை. ஆனால், அதில் ஏதோ பெரிய உள்நோக்கம் இருக்கிறது என்பது மட்டும் அவனுக்கு புரிந்தது.
நமது கதாநாயகன் வல்லவரையன் வந்தியத்தேவனை இலங்கையின் பூதத்தீவில் விட்டுவிட்டு பிரிந்து வெகு நாட்கள் ஆகிவிட்டன. இப்போது, நம் வீரனுடன் நாம் பயணப்படுவோம்.
பூதத்தீவில் இருந்து மாதோட்ட மாநகருக்குச் சென்றான், வந்தியத்தேவன். அங்கு சோழ சேனாதிபதியை சந்திக்க வேண்டும் என்று, பழுவேட்டரையர்களிடம் கையாண்ட அதே யுக்தியை அங்கும் கையாண்டான். பழுவூர் இளையராணி கொடுத்த பனை இலச்சினை மோதிரத்தைக் காண்பித்து கோட்டைக்குள் நுழைய முயற்சித்தான்.
அப்போது, அங்கு சோழ இலங்கைப் படையின் சேனாதிபதியாக இருந்தவர், கொடும்பாளூர் பெரிய வேளாளர் பூதி விக்கிரம கேசரி. அவர்கள் குளத்தின் தோன்றிய பெண் இளவரசி தான் குந்தவை தேவியுடன் இருக்கின்ற வானதி தேவி. கொடும்பாளூர் பெரிய வேளாளர்களுக்கும், பழுவேட்டரையர்களுக்கும் எப்போதுமே போட்டி இருக்கும். இந்நிலையில், அவர்களுடைய பழுவூர் மோதிரத்தை அடையாளமாகக் காண்பித்ததால் வந்தியத்தேவனை சிறைப்படுத்தி விட்டனர்.
பிறகு நமது ஆழ்வார்க்கடியான் அங்கு வந்து வந்தியத் தேவனைக் காப்பாற்றி அழைத்துச் சென்றான். பிறகு இருவரும் சேர்ந்து சேனாதிபதியைச் சந்தித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினர்.
பயணத்தில் வந்தியத்தேவன் மற்றும் ஆழ்வார்க்கடியானுடன் சேர்ந்து, இரு வீரர்கள் வந்தார்கள். அவர்கள் தொடர்ந்து கால் நடையாக பயணம் போனார்கள்.
அவர்கள் பயணித்த பாதையில் திடீரென ஒரு மதங்கொண்ட யானை வந்தது. அதைக் கண்டு அங்கிருந்து எல்லோரும் சிதறி ஓட முயன்றனர். ஆனால், அருகிலேயே ஒரு பள்ளத்தாக்கு இருந்தது. அங்கிருந்து ஓடினால் பள்ளத்தில் விழும் சூழ்நிலை தான் இருந்தது. வந்தியத்தேவனுக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. யானை நெருங்கி வந்துவிட்டது. ஆழ்வார்க்கடியானை நோக்கி ஓடி வந்தது மதங்கொண்ட யானை. ஆழ்வார்க்கடியான் தன்னுடைய கைத்தடியை ஓங்கி யானையை நிறுத்த முயன்றான். அதைக் கண்டதும் அந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, வந்தியத்தேவனுக்கு சிரிப்பு தான் வந்தது. மதங்கொண்ட யானையை கைத்தடியால் நிறுத்தி விட முடியுமா என்ன…?
வந்தியத்தேவன் தன்னுடைய கையில் இருந்த வேலை எடுத்து ஓங்கினான். அதற்குள் யானையை காணவில்லை. யானை பள்ளத்தாக்கில் விழுந்துவிட்டது. விழுந்து இறந்துவிட்டது. அதே சமயம் நம்முடைய ஆழ்வார்க் கடியானைக் காணவில்லை. அவன் செத்தே போய் விட்டான். வந்தியத்தேவனுக்கு அடுத்து என்ன செய்வது என்றே புரியவில்லை. வல்லவரையன் மனமடைந்து போனான்.
திடீரென்று பள்ளத்தாக்கின் பக்கம் இருந்து ஒரு குரல் கேட்டது. ஆழ்வார்க்கடியான் ஒரு மரத்தின் வேரில் தொங்கிக் கொண்டிருந்தான். எல்லோரும் சேர்ந்து அவனைக் காப்பாற்றி பயணத்தைத் தொடர்ந்தார்கள். வெகு நேரத்திற்கு பின்பு அவர்களின் தேடலுக்கு ஒரு விடை கிடைத்தது.
இளவரசரிடம் அழைத்துச் செல்வதற்காக ஒருவன் இரண்டு குதிரைகளை கொண்டு வந்தான். அதில் வந்தியத்தேவனும் ஆழ்வார்க்கடியானும் ஏறினார்கள். அவர்களுக்கு முன்பாக இரண்டு குதிரையில் இரண்டு வீரர்கள் தயாராக இருந்தார்கள். குதிரைகள் விரைந்து சென்றன. திடீரென்று முன்னாள் சென்ற ஒரு குதிரை திரும்பியது.
அதிலிருந்த வீரன் வந்தியத்தேவனோடு சண்டையிட்டான். இருவரும் அடித்துக் கொண்டு புரண்டனர். வந்தியத்தேவன் எவ்வளவோ போராடியும் அந்த வீரனை வீழ்த்த முடியவில்லை. நம் வீரனின் இடுப்பில் இருந்த ஓலையையும் அந்த வீரன் எடுத்துக் கொண்டான்.
பிறகு தான் தெரிந்தது; அந்த ஓலை யாரிடம் சென்று சேர வேண்டுமோ, அவரிடம் தான் சென்று சேர்ந்து இருக்கிறது. நமது இளவரசர், பொன்னியின் செல்வர் அருள்மொழி வர்மர் தான், அவர்.
அருள் மொழி வர்மருடன், வந்தியத்தேவன் இருந்த காலங்கள் எல்லாம் மிகவும் இனிமையானவை. இப்படி ஒரு இளவரசரை அவன் பார்த்ததே இல்லை. இலங்கை நாட்டில் யுத்தம் நடப்பதற்கான எந்த ஒரு அறிகுறியுமே இல்லை. இளவரசர் மக்களிடமும், போர் வீரர்களிடமும் அவ்வளவு அன்பாக நடந்து கொள்கிறார். மக்களை வாட்டி வதைக்கவில்லை. எந்த அளவிற்கு வீரனாக இருக்கிறாரோ; அந்த அளவிற்கு அன்பானவராக இருக்கிறார். இப்படி ஒரு இளவரசரை, இப்படி ஒரு நல்ல மனிதரை இத்தனை நாளாக நாம் சந்திக்கவில்லையே என்று மனதுக்குள் குமுறிக் கொண்டான், வவந்தியத்தேவன். இளவரசர் அருள்மொழி வர்மருடன் யார் பழகினாலும், அவர்கள் அவருக்காக மட்டுமே உழைக்கத் தொடங்கி விடுவார்கள். அப்படி ஒரு ஈர்ப்பு சக்தி நமது இளவரசரிடம் இருந்தது.
பின்னர் இளவரசர், ஆழ்வார்கடியான், வந்தியத் தேவன் ஆகிய மூவரும் ஒரு ரகசிய இடத்துக்கு சென்றனர். அங்கு புத்த அமைப்பு ஒன்று இளவரசருக்கு இலங்கை சிம்மாசனத்தை அளிக்க முன் வந்தது. ஆனால், இளவரசர் அதை மறுத்துவிட்டார்.
சிறிது நேரத்துக்கெல்லாம், அங்கிருந்து மூவரும் புறப்பட்டு ஒரு பழைய மண்டபத்தை அடைந்தனர். அங்கு இளவரசர் இருவருக்கும் ஒரு சம்பவத்தைப் பற்றி விளக்கினார்.
சில காலமாகவே ஒரு ஊமைப் பெண் வந்து தன்னை எல்லா ஆபத்திலிருந்தும் காப்பாற்றி வருவதாக சொன்னார். அதை இருவரும் ஆர்வத்தோடு கேட்டுக் கொண்டிருந்தனர்.
அந்த பழைய மண்டபத்திலிருத்தும் அதே ஊமைப் பெண் அழைத்ததின் பேரில் அங்கிருந்து வேறு இடத்திற்கு மூவரும் சென்றனர். அந்த இடத்தில் பல ஓவியங்கள் தீட்டப்பட்டிருந்தன. அதன் மூலம் இளவரசர், பல்வேறு செய்திகளை முழுமையாக தெரிந்து கொண்டார். அது வெறும் செய்திகள் அல்ல. வரலாறு…….
இப்போது சிறிது நேரத்திற்கு முன் சுந்தரச் சோழர், குந்தவை தேவியிடம் சொன்ன இரகசியத்தை பற்றி நாம் பார்த்தோம் அல்லவா? அதை இங்கே நாம் நினைவில் வைத்துக் கொள்வது, அவசியமாகிறது.
கடலுக்கு மத்தியில் ஒரு தீவில், ஒரு பெண் தன் தந்தையுடன் வசித்து வருகிறாள். அப்போது ஒரு மரத்தின் மீது ஒரு இளைஞன் உட்கார்ந்திருப்பதை பார்த்தாள். அவனை ஒரு கரடி நெருங்கிக் கொண்டிருக்கிறது. அதை பார்த்து சத்தம் போட்ட அந்தப் பெண்ணை, கரடி துரத்தியது. பிறகு அந்த பெண்ணைக் காப்பாற்றினான் அந்த இளைஞன். இருவருக்கும் இடையில் காதல் உண்டானது. இவள் ஊமை என்பதையும், காது கேளாதவள் என்பதையும் அந்த இளைஞன் தெரிந்து கொண்டான். சில நாளில் ஒரு மரக்கலம் அங்கு வந்தது. அந்த மரக்கலத்தில் ஏறி அந்ந இளைஞன் சென்று விட்டான். பின்னாளில் அவர் அரசரானார். அந்த இளைஞன் அரசன் ஆகியதைப் பார்த்து அந்த ஊமைப் பெண், மனம் உடைந்து அங்கிருந்து ஓடி கலங்கரை விளக்கத்தின் மேல் ஏறி குதித்தாள். அலைகள் அவளைத் தழுவிக் கொண்டன. உயிருக்கு போராடியவளை படகில் வந்த ஒருவன், காப்பாற்றி உயிர் பிழைக்க வைத்தான். அவளை ஒரு கோவிலில் கொண்டு போய் சேர்த்தான்க்ஷ
அந்த கோவிலுக்கு ஒரு ராணி வந்தாள். அந்த ராணிக்கு இவளை பற்றிய செய்தி தெரிந்தது. அப்போது, அந்த ராணி கர்ப்பம் தரித்திருந்தாள். இந்த ஊமை பெண்ணும் கர்ப்பம் தரித்திருந்தாள். பிறகு அந்த ராணி அவளை அரண்மனைக்கு அழைத்துப் போனாள். அங்கு, அவளுக்கு இரண்டு குழந்தைகள் பிறந்தன. அந்த இரண்டு குழந்தைகளையும் ராணியே வளர்ப்பதாக தீர்மானித்தாள். அந்த ஊமைப் பெண்ணும் அங்கிருந்து சென்று விட்டாள். வெகுகாலம் காட்டில் வசித்து வந்தாள். தன் குழந்தைகளை அடிக்கடி பார்க்க வேண்டும் என்று ஆசை வந்துவிடும். அப்போது, ஆற்றங்கரை ஓரமாக நின்று குழந்தைகளை பார்த்துவிட்டு போய்விடுவாள். ஒரு நாள் குழந்தை ஆற்றில் விழுந்ததைக் கண்டாள்; அந்த ஊமைப் பெண். அப்போது தான் அவள் குழந்தையைக் காப்பாற்றினாள்.
அந்த காப்பாற்றப்பட்ட குழந்தை தான், இளவரசர் அருள் மொழி வர்மர். காப்பாற்றியவர் இந்த ஊமைப் பெண். உயிரோடு இருப்பவளைக் கனவில் கண்டு விட்டு, ஆவியாக வந்திருக்கிறாள் என்று நினைத்து குந்தவையிடம் புலம்பிக் கொண்டிருந்தார், சுந்தரச் சோழர். இவையெல்லாம் அந்த ஓவியங்களால் இளவரசருக்கு புரிந்தது
அனைத்தும் ஓவியமாக வரையப்பட்டிருந்தது கண்டு அருள் மொழி வர்மர் ஆச்சரியம் அடைந்தார். பல இரகசியங்களையும், வரலாறையும் தெரிந்து கொண்டார், இளவரசர்.
மூவரும் அன்று இரவு அங்கேயே தங்கினர். அவர்கள் ஏற்கனவே தங்கியிருந்த அந்த பழைய மண்டபம், தற்போது தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததைக் கண்டார், இளவரசர். ரவிதாசனும், அவனுடைய ஆட்களும் தான் இந்த வேலையைச் செய்து இருக்கிறார்கள். ஒருவேளை இவர்கள் அங்கு இருந்திருந்தால், நம் இளவரசரும், வந்தியத்தேவனும், ஆழ்வார்க்கடியானும் இறந்து போயிருக்கக் கூடும். நல்ல வேலையாக இந்த ஊமைப் பெண் அவர்களை காப்பாற்றி, வேறு இடத்திற்கு அழைத்து வந்துவிட்டாள்.
அங்கிருந்து காலை கிளம்பும்போது இளவரசரும், வந்தியத்தேவனும் திடீரென்று கத்தி சண்டையில் ஈடுபட்டனர். ஆழ்வார்க்கடியானுக்கு அந்த சண்டை ஏன் என்று புரியவில்லை. அவர்கள் கடுமையாக சண்டை போட்டுக் கொண்டிருந்தபோது, அங்கு பார்த்திபேந்திரனும், சேனாதிபதியும், பூங்குழலியும் வந்தனர். பிறகு இளவரசர், வந்தியத்தேவனைத் தழுவிக் கொண்டு, நீ சிறந்த வீரன்; என்னுடன் நண்பனாக அனைத்து தகுதியும் உனக்கு உண்டு என்று இளவரசர் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இருந்தாலும் இளவரசரின் இந்த திடீர் தாக்குதலை வந்தியத்தேவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவன் திகைத்துப் போனான்.
பூங்குழலியைப் பார்த்ததும், வந்தியத்தேவனுக்கு ஒரு செய்தி நினைவுக்கு வந்தது. உடனே இளவரசரிடம் சென்று, இளவரசரே! சமுத்திரகுமாரியை உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டான். ஆனால், அவர் “தெரியாது” என்று சொல்லிவிட்டார். பூங்குழலி, தன்னை இளவரசருக்கு நன்றாகத் தெரியும் என்று சொன்னாளே, ஆனால், இளவரசர் தெரியவில்லை என்று சொல்கிறாரே? என்னவென்று புரியவில்லையே என்று குழம்பிப் போனான், நம் வீரன்.
பிறகு, பார்த்திபேந்திரன் கொண்டு வந்த செய்தியை இளவரசரிடம் சொன்னான். காஞ்சியிலிருந்து தங்கள் அண்ணன் செய்தி அனுப்பி இருக்கிறார். இங்கிருந்து உடனே புறப்பட்டு காஞ்சிக்கு வருமாறு தங்கள் அண்ணன், அழைப்பு விடுத்திருக்கிறார் என்றான், பார்த்திபேந்திரன்.
அப்போது குறுக்கிட்ட வந்தியத்தேவன், தங்கள் அக்கா குந்தவை தேவி தங்களை பழையாறைக்கு வருமாறு அழைப்பு விடுத்திருக்கிறார். இளவரசரே! உங்கள் அக்காவின் வாக்கை, நீங்கள் எப்போதும் மீற மாட்டீர்கள். அதனால், நீங்கள் என்னுடன் பழையாறைக்குத் தான் வர வேண்டும் என்று கூறினான்
ஆழ்வார்க்கடியான், தன் பங்கிற்கு அவன் கொண்டு வந்த செய்தியை சொன்னான். இளவரசரே! இப்போது தாங்கள் எங்கும் செல்லக்கூடாது. நிலைமை சரியில்லை. அதனால், தாங்கள் இலங்கையிலேயே இருக்குமாறு, முதன் மந்திரி அனிருத்த பிரம்மராயர் அவர்கள் தங்களிடம் சொல்ல சொன்னார், என்று கூறினான்.
அங்கிருந்த சேனாதிபதி எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, கடைசியாக அவர் ஒரு செய்தியை சொன்னார். தங்களை கைது செய்து அழைத்துப் போக தஞ்சையிலிருந்து பழுவேட்டரையர்களின் ஆட்கள் வந்திருக்கிறார்களாம். சக்கரவர்த்தியின் உத்தரவின் பேரில் வந்திருக்கிறார்களாம். இந்த செய்தி பூங்குழலி மூலம் கிடைத்தது, என்று சொன்னார் சேனாதிபதி.
நான்கு திசைகள் போல, நான்கு செய்திகள் வந்து இளவரசரைச் சேர்ந்திருக்கின்றன. இளவரசர் ஒருவர் தான்… எப்படி நான்கு பேரின் செய்திகளையும், ஒரே நேரத்தில் நிறைவேற்ற முடியும்? இளவரசர் ஆழ்ந்து சிந்தித்தார். பிறகு, தன் முடிவை சொன்னார். சக்கரவர்த்தி உத்தரவு தான் எனக்கு முக்கியம். அவரை மீறி நான் நடக்கப் போவதில்லை. அதனால், என்னை கைது செய்ய வந்தவர்களுடன் சேர்ந்து தஞ்சைக்கு போகப் போகிறேன் என்றார், இளவரசர் அருள் மொழி வர்மர்.
வந்தியத்தேவன், பார்த்திபேந்திரன், ஆழ்வார்கடியான், சேனாதிபதி, பூங்குழலி உட்பட யாருமே அதை ஏற்கவில்லை. அவரை செல்ல விடாமல் தடுத்தனர். இருந்தாலும் தன் முடிவில் உறுதியாக இருந்தார். தொண்டைமான் ஆற்றின் முகத்துவாரத்தை நோக்கிப் புறப்பட்டார், இளவரசர். சேனாதிபதியும் பாதுகாப்புக்கு ஆட்களை அழைத்துக் கொண்டு உடன் வந்தார். இளவரசரை வழியனுப்பிவிட்டு திரும்பி வர முடிவு செய்திருந்தார், சேனாதிபதி பூதி விக்கிரம கேசரி. இவர்கள் புறப்படும் முன்னே பார்த்திபேந்திர பல்லவன் காஞ்சிக்கு புறப்பட்டுச் சென்றுவிட்டான்.
இளவரசர் சேனாதிபதியோடு சேர்ந்து வர விரும்பவில்லை. அதனால், யானை மீது ஏறினார். பூங்குழலியும் யானை மீது தான் இருந்தாள். இளவரசருக்கு யானைகள் பாஷை நன்றாக தெரியும். அதனால், யானையின் காதில் ஏதோ சொன்னார். யானை மதம் கொண்டது போல் வெகு விரைவாக ஓடியது. இவர்கள் யாராலும் அவரை பின்தொடர முடியவில்லை.
மிக விரைவிலேயே தொண்டைமானாற்றின் முகத்துவாரத்தை இளவரசரும், பூங்குழலியும் அடைந்தார்கள். பூங்குழலியுடன் இளவரசர் மட்டும் இருப்பது பூங்குழலிக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. பூங்குழலிக்கு, அவர் மீது காதல் இருந்தது. அவருக்கும் அந்த காதல் சிறிது இருந்தது.
பூங்குழலி பார்த்த கப்பல் அந்த இடத்தில் தற்போது இல்லை. அருகில் சென்று பார்த்தால், அந்த கப்பல் தரை தட்டி உடைந்து போயிருந்தது. இன்னொரு கப்பலை காணவில்லை. பிறகு என்ன செய்வதென்று இளவரசருக்கு புரியவில்லை. பொழுதும் இருட்டிவிட்டது. அன்றைய தினம் இரவு இளவரசரும், பூங்குழலியும் அங்கேயே தங்கினார்கள். அந்த ஊமைப் பெண்ணும் எங்கிருந்தோ வந்து, இவர்களோடு தங்கினார். அவரைப் பற்றி உனக்கு எதுவும் தெரியுமா? என்று இளவரசர் பூங்குழலியிடம் கேட்டார். அவர் எனக்கு அத்தை முறை தான் என்று சொன்னாள், பூங்குழலி
சிறிது நேரத்துக்கு முன், யானை மதம் பிடித்து ஓடியதை கண்ட வந்தியத் தேவனுக்கும், பிறருக்கும் என்ன செய்வது என்று புரியாமல் நின்றார்கள். அவர்கள் அங்கிருந்து பயணப்பட்டு படகில் ஏறி வந்தனர். வெகுநேரம் ஆகி இருட்டிவிட்டதால் அன்று இரவு, ஒரு இடத்தில் தங்கி விட்டு காலையில் பயணத்தை தொடர்ந்தனர். இதற்கிடையில் வந்தியத்தேவன் அவசரப்பட்டு ஒரு கப்பல் சென்றதை பார்த்து, அதில் ஏறிக்கொண்டான். அதில் இளவரசர் இருப்பார் என்று நினைத்தான். ஆனால், கொள்ளைக்கார அராபியர்கள் தான் அங்கு இருந்தார்கள். போதாக்குறைக்கு மந்திரவாதி ரவிதாசனும், அவனுடைய கூட்டாளி ஒருவனும் இருந்தனர். அவர்களிடம் வழியச் சென்று கடுமையாக மாட்டிக் கொண்டான்.
பின்பு சேனாதிபதியும் அவருடன் வந்தவர்களும் இளவரசரை சந்தித்தனர். அந்த ஊமைப் பெண் எல்லோரையும் ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்றாள். அங்கு பல மனிதர்கள் இறந்து கிடந்தனர். ஒருவன் உயிருக்கு போராடிக் கொண்டிருந்தான். அவனிடம் சென்றார், இளவரசர். அவன் சோழ நாட்டின் கலபதி தான். அப்போது சேனைத் தலைவனை தளபதி என்று அழைத்தது போல, மரக்கலத் தலைவனை கலபதி என்று அழைத்தார்கள். அவன் தான் சக்கரவர்த்தியின் உத்தரவை ஏற்று இளவரசரைக் கைது செய்ய வந்தவன். அராபியர்கள் தான் தங்களை தாக்கி அழித்துவிட்டு சென்றுவிட்டதாக, நடந்த உண்மையை எல்லாம் இளவரசரிடம் கூறிவிட்டு, கலபதி இறந்துவிட்டான்.
பிறகு வந்தியத்தேவனும், அந்த அராபியர்களிடம் சிக்கிக் கொண்டான் என்பதை அறிந்த இளவரசர்; அவனைக் காப்பாற்ற எண்ணினார். சிறிது காலத்திலேயே அவன் மீது இளவரசருக்கு நல்ல அபிமானம் உண்டாகி இருந்தது. அதன் காரணமாகவே இளவரசர் அவனைக் காப்பாற்ற எண்ணினார். அந்த வழியாக பார்த்திபேந்திரனின் கப்பல் வந்து கொண்டிருந்தது. அதில் ஏறி, அந்த அராபியர்களின் கப்பலைத் துரத்தி பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார், இளவரசர் அருள் மொழி வர்மர்.
இந்நேரம் இரவிதாசனும், அவனுடைய கூட்டாளியும் சேர்ந்து அராபியர்களை எல்லாம் கொன்று விட்டு, வந்தியத்தேவனை தங்கள் அணியில் சேர்த்துக் கொள்ள தயாராக இருந்தார்கள். வந்தியத்தேவன் அதற்கு மறுத்து; அவர்களை கொலை செய்ய முயன்றான். ஆனால், அவர்கள் சாமர்த்தியமாக அங்கிருந்து படகில் தப்பித்து விட்டனர். இப்போது, நம் வீரன் மட்டும் அந்தக் கப்பலில் தனியாக மாட்டிக் கொண்டான். அந்நேரம் சுளிக் காற்று வந்து கப்பலை தாக்கியது. இடியும் மின்னலுமாக வந்தது. மழை பெய்தது. இடி விழுந்ததில் கப்பல் தீப்பற்றி எரியத் தொடங்கியது.
இளவரசர் ஒரு வழியாக, வந்தியத்தேவனைத் தேடி கண்டுபிடித்து அவனை காப்பாற்றி விட்டார். அந்த அராபியர்கள் கப்பல் உடைந்து கடலுக்குள் மூழ்கி விட்டது. இளவரசரின் படகில் ஏறி வந்தியத்தேவன் பார்த்திபேந்திரனின் கப்பலை நோக்கி வந்து கொண்டிருந்தான். அந்த அராபியர் கப்பலின் பாய் மரம் ஒன்று இவர்கள் படகில் உடைத்து விழுந்தது. பாய்மரம் மோதியதில் படகு சுக்கு நூறானது. இளவரசரும், வந்தியத்தேவனும் அந்த பாய் மரக் கட்டையைப் பிடித்துக் கொண்டு கடலில் மிதந்தனர்.
இந்நேரம் பூங்குழலியும் தொண்டைமானாற்றில் இருந்து கோடிக்கரைக்கு புறப்பட்டாள். பொழுது இருட்டியதால் வரும் வழியில் ஒரு தீவில் தங்கினாள். சுழிக்காற்றில் சிக்கிக் கொள்ளாமல் அங்கேயே பத்திரமாக இருந்தாள்.
மறுநாள் காலையில் படகை எடுத்து புறப்பட தயாரான போது, ஒரு மனிதன் தீவில் கரை சேர்ந்தான். “சுளிக்காற்றால் அவன் வந்த கப்பல் உடைந்து விட்டதென்றும், அங்கிருந்து உயிர்பிழைத்து வந்தேன்” என்றும் அவன் சொன்னான். அவனை காப்பாற்றி தீவில் சேர்த்தாள், பூங்குழலி. ஒருவேளை வேறு யாரேனும் இதுபோல கடலில் தத்தளித்துக் கொண்டிருக்கலாம்; அவர்களை காப்பாற்றலாம் என்று எண்ணி படகை கடலுக்குள் செலுத்தினாள்.
அவள் சென்ற நேரம் நல்ல நேரமாக போனது. வந்தியத்தேவனும், இளவரசரும் கடல் நீரோடு மிகவும் போராடிக் கொண்டிருந்தனர். அவர்களைக் கண்டதும் பூங்குழலி அதிர்ச்சி அடைந்தாள். அவர்களைக் கண்டதும் அவர்கள் இருவரையும் படகில் ஏற்றி காப்பாற்றிக் கொண்டு, கரைக்குப் புறப்பட்டாள், பூங்குழலி.
இரண்டாம் பாகம் முற்றும்….
தொடரும்….