நோய் இல்லாமல், ஆரோக்கியமாக வாழ உணவுகள் சத்துள்ளதாக இருக்கவேண்டியதும் அவசியம். ஆனால், நாகரிகம் என்ற பெயரில் மேற்கத்திய மோகம், சத்துகளை மறந்து சுவைக்கு முக்கியத்துவம் கொடுக்கவைத்துவிட்டது. அதனால், உடலுக்கு அத்தியாவசியமாகக் கிடைக்கவேண்டிய சத்துகள் கிடைக்காமல் போய்விடுகின்றன. இதனால், சத்துக் குறைபாடு, உடல்நலக் குறைபாடுகள் தொடங்கி, ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.
1.யோகர்ட் (curd)
எலும்பு, பற்கள் வலிமை பெற கால்சியம் சத்து அவசியம். பால் பொருள்களில்தான் இது அதிகளவு உள்ளது. சிலருக்கு பால் பொருள்களில் கொழுப்பு நீக்கப்பட்ட யோகர்ட் அனைவருக்கும் ஏற்றது. அதேபோல் தயிரைத் தினமும் சேர்த்துக்கொள்ளக் கூடாது. எனவே, கால்சியம் கிடைக்க தினமும் ஒரு கப் யோகர்ட் சாப்பிடலாம். மேலும், உடலுக்கு அத்தியாவசியமான பாஸ்பரஸ், பொட்டாசியம், துத்தநாகம், ரிபோஃப்ளாவின், வைட்டமின் பி12 மற்றும் புரதச்சத்தும் உள்ளன. காலை, மாலை என யோகர்ட்டை பகல் நேரத்தில் எப்போது வேண்டுமானலும் உட்கொள்ளலாம். யோகார்ட் மூலமாக 100 கலோரிகள் கிடைக்கும்; கால்சியம், வைட்டமின் டி நிறைவாக உள்ள சிறந்த உணவு இது.

2.ஆளி விதைகள்
இந்தச் சிறிய விதையில் பெரிய பலன்கள் உள்ளன. ஆளி விதைகளில் ஒமேகா 3 ஃபேட்டி அமிலம் உள்ளது. இதில் பாலிஅன்சாச்சுரேட்டடு கொழுப்புகள் உள்ளன. இதில் நார்ச்சத்து நிறைவாக உள்ளது. நாம் சாப்பிடும் உணவு அல்லது நொறுக்குத்தீனிகளில் இதை உடன் சேர்த்துக்கொண்டால் எளிதில் செரிமானமாகும். குறிப்பாக, குழந்தைகள் இதைத் தனியாகச் சாப்பிட விரும்ப மாட்டார்கள். எனவே, அவர்கள் விரும்பிச் சாப்பிடும் ஓட்ஸ், தயிர், சாலட், சாண்ட்விச் போன்றவற்றில் இந்த விதைகளைக் கலந்து கொடுக்கலாம்.

3.முட்டை
புரதச்சத்துதான் ஆரோக்கியத்துக்கும் உடல் வளர்ச்சிக்கும் அடிப்படையானது. முட்டை மிகச் சிறந்த புரதச்சத்துள்ள உணவு. இதை அடிக்கடி உணவிலோ அவித்தோ, பொரியல், ஆம்லெட் என எந்த வகையிலாவது சாப்பிட்டுவருவது நல்லது. தினமும் காலையில் ஒரு முட்டை சாப்பிட்டால், அதில் உள்ள அதிகப்படியான புரோட்டீன் மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட் நாள் முழுவதும் உடலை ஆரோக்கியத்துடன் வைத்துக்கொள்ளும்.

4.பீன்ஸ்
பீன்ஸில் ஆன்டிஆக்ஸிடன்ட்டுகள், புரோட்டீன், நார்ச்சத்து, பி காம்ப்ளக்ஸ், கார்போஹைட்ரேட், வைட்டமின்கள் உள்ளன. மேலும், இரும்புச்சத்து, மாங்கனீஸ், பாஸ்பரஸ் மற்றும் மக்னீசியம், தாமிரம் போன்ற தாதுச்சத்துகளும் நிறைவாக இருப்பதால், இது உடலில் ஊட்டச்சத்துக் குறைபாடு ஏற்படுவதைத் தடுத்து, ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவும்.

5.நட்ஸ்
நட்ஸ் அனைத்திலுமே வைட்டமின்களும் கனிமச்சத்துகளும் நிறைந்த உணவு. இதில் மோனோ அன்சாச்சுரேட்டடு கொழுப்பு அமிலம் உள்ளது. இது நல்ல கொழுப்பான ஹெச்.டி.எல் அளவை அதிகரிக்க உதவுகிறது. இதனால் இதய நோய்கள் மற்றும் ரத்தக் குழாய் அடைப்பால் ஏற்படக்கூடிய பக்கவாதம் வருவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. அன்றாடம் 10 கிராம் என்ற அளவிலாவது சாப்பிடுவது நல்லது.

6.பூசணி விதைகள்
பூசணிக்காயில் உள்ள சத்துகளைப் போலவே பூசணிக்காய் விதையிலும் ஏராளமான சத்துகள் நிறைந்துள்ளன. குறிப்பாக, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாதுப்பொருள்கள் மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன. எனவே, நாம் பூசணிக்காய் விதையைக் காயவைத்து, பொடியாகவோ அப்படியேவோ நமது அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ளலாம்.

ஆரஞ்சு
ஆரஞ்சு பழத்தில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைச் சாப்பிட்டால், அது எண்ணிலடங்கா ஆற்றலை உடலுக்குக் கொடுக்கும். மேலும், இந்தப் பழங்கள் செரிமானத்துக்குச் சிறந்தது. அதோடு, இதில் உள்ள ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உடலில் உள்ள நச்சுகளை வெளியேற்றும். தினசரி ஒரு ஆரஞ்சை பழமாகவோ ஜூஸாகவோ சாப்பிட்டுவருவது நல்லது. ஒரு கிளாஸ் ஆரஞ்சு பழச் சாற்றுடன் அன்றைய நாளைத் தொடங்குவது கூடுதல் பலன்.

8.சர்க்கரைவள்ளிக்கிழங்கு
சர்க்கரைவள்ளிக்கிழங்கில் உள்ள வைட்டமின் ஏ சத்திலிருந்து கிடைக்ககூடிய ஆல்பா மற்றும் பீட்டா கரோட்டீன் கண்கள், எலும்பு ஆரோக்கியத்துக்கு அவசியமானவை. இந்தக் கிழங்கை அப்படியே அல்லது வேகவைத்துச் சாப்பிடலாம்.

9.பெர்ரி பழங்கள்
ஸ்ட்ராபெரி போன்ற அனைத்து வகை பெர்ரி பழங்களிலும் அதிகளவு நார்ச்சத்து உள்ளன. டயட்டில் இருப்பவர்களின் செரிமானத்தை ஊக்குவிக்க மிகச் சிறந்த உணவு. ஒரு காலை உணவின் ஆரோக்கியம் அதிகரிக்க, அதில் சில செர்ரி பழங்களைச் சேர்த்துக்கொள்ளலாம்.

10.கீரை வகைகள்
கீரை வகைகளில் குறைந்த அளவு வைட்டமின் ஏ-யும் வைட்டமின் சி மற்றும் கே அதிக அளவிலும் உள்ளன. உடலுக்குத் தேவையான தாதுசத்துகளான இரும்புச்சத்து, கால்சியம், பொட்டாசியம், மக்னீசியம், வைட்டமின் இ ஆகியவையும் உள்ளன. தினமும் ஒரு கீரையை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். முடியாத பட்சத்தில் வாரம் இரு முறையாவது கீரையைச் சாப்பிடவேண்டியது அவசியம். கீரையுடன் பூண்டு சேர்த்துகொள்வது சுவையைக்கூட்டும். கூடுதல் மருத்துவப் பலன்களையும் தரும்.
